இந்திய தகவல் தொழில்நுட்ப மற்றும் மென்பொருள் நிறுவனங்களின் முன்னணி வர்த்தக அமைப்பான NASSCOM இன் தலைவர் திரு. ராஜேஷ் நம்பியார் தலைமையிலான இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் அடங்கிய உயர்மட்ட குழுவொன்று 2026 ஜூலை 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் கொழும்பிற்கு விஜயம் மேற்கொண்டது.
2026 ஜூலை 16 ஆம் திகதி, இந்திய உயர்ஸ்தானிகராலயத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில், இலங்கை தொழில்நுட்ப சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்காக (Tech SMEs) NASSCOM இன் முக்கிய வழிகாட்டல் திட்டமான ‘DISHA’ அறிமுகப்படுத்தப்பட்டது. DISHA திட்டம் என்பது, NASSCOM SME கவுன்சிலால் வடிவமைக்கப்பட்ட கட்டமைக்கப்பட்ட மற்றும் அதிக தாக்கமிக்க முன்முயற்சியாகும். இது தொழில்நுட்பத் துறையில் உள்ள சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கு மூலோபாய வணிக வழிகாட்டல், நிறுவன வளர்ச்சி திசை மற்றும் நடைமுறை வளர்ச்சி ஆலோசனைகளை வழங்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது. இந்தியாவிற்கு வெளியே இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் முதல் நாடாக இலங்கைத் தெரிவாகியுள்ளது.
இந்நிகழ்வில் மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப், இலங்கை அரசின் டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன, கைத்தொழில் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு பிரதி அமைச்சர் கௌரவ சதுரங்க அபேசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர். ஜனாதிபதியின் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கான பிரதம ஆலோசகர் டாக்டர் ஹன்ஸ் விஜயசூரிய, டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் வருண ஸ்ரீ தனபால மற்றும் அரசின் உயரதிகாரிகள், முன்னணி வர்த்தகத் தலைவர்கள், தொழில்நுட்ப வலையமைப்புகள், சிந்தனைக் குழுக்கள் மற்றும் ஊடகப் பிரதிநிதிகளும் இதில் பங்கேற்றனர்.
நிகழ்வு NASSCOM தலைவர் திரு. ராஜேஷ் நம்பியாரின் உரையுடன் ஆரம்பமானது. அவர் இந்தியா-இலங்கை தொழில்நுட்ப கூட்டாண்மையின் வலிமையையும், செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் காணப்படும் பரந்த வாய்ப்புகளையும் எடுத்துரைத்தார். இந்திய உயர்ஸ்தானிகர் மேதகு சந்தோஷ் ஜா, இலங்கையின் தொழில்துறை தலைவர்கள் இந்தியாவுடன் வலுவான தொழில்நுட்ப கூட்டாண்மையை உருவாக்குவதில் காட்டும் அர்ப்பணிப்பைப் பாராட்டினார். டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் கௌரவ எரங்க வீரரத்ன, இலங்கையின் தொழில்நுட்ப சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்காக இத்திட்டத்தை அறிமுகப்படுத்திய NASSCOM இன் முயற்சிகளை பாராட்டியதுடன், இக்கூட்டாண்மைக்கு இலங்கை அரசின் முழுமையான ஆதரவு இருப்பதையும் தெரிவித்தார். NASSCOM SME கவுன்சிலின் தலைவர் திரு. மௌலிக் பன்சாலி, DISHA திட்டத்தின் கண்ணோட்டத்தையும், தொழில்நுட்ப சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் அது ஏற்படுத்திய மாற்றங்களையும் விளக்கினார்.
இதனைத் தொடர்ந்து “தொழில்நுட்பம், கூட்டாண்மை மற்றும் செயற்கை நுண்ணறிவு” என்ற தலைப்பில் கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் இலங்கையைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்களின் நிறுவுநர்கள் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரிகள் பங்கேற்றனர். WSO2 நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர் சஞ்சீவ வீரவர்ண, Hatch நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஜீவன் ஞானம், InfoBeans Technologies நிறுவனத்தின் இணை நிறுவனர் அவிநாஷ் சேதி, Metacube Software நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் செயல் அதிகாரி பரிஜாத் அகர்வால், Integra Software Services நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஸ்ரீராம் சுப்பிரமண்யா ஆகியோர் கலந்துகொண்டனர். இக்கலந்துரையாடலை PickMe நிறுவனத்தின் நிறுவனர் ஜிஃப்ரி ஸுல்ஃபர் வழிநடத்தினார்.
DISHA வழிகாட்டல் திட்டத்தின் முதல் கட்டத்திற்காக இலங்கையிலிருந்து 48 தொழில்நுட்ப சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளன. கலந்துரையாடலுக்குப் பின்னர், தெரிவுசெய்யப்பட்ட நிறுவனங்களுக்காக NASSCOM வழிகாட்டுநர்களினால் ஆலோசனை அமர்வுகள் நடத்தப்பட்டன.
இந்நிகழ்வு, தொழில்நுட்பம் மற்றும் புதுமைத் துறைகளில் இந்தியா மற்றும் இலங்கைக்கிடையிலான உறவின் வலிமையையும், செயற்கை நுண்ணறிவு உலகில் இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு வாய்ப்புகளையும் வெளிப்படுத்தியது.








