இந்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை இலங்கைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் புதுடெல்லியில் உள்ள மத்திய நிதி அமைச்சக அலுவலகத்தில் மரியாதை நிமிர்த்தமாகச் சந்தித்து முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர் திரு. ம. வெங்கடேசன் அவர்களின் ஒருங்கிணைப்பில் இச்சந்திப்பு நடைபெற்றது.
கலந்துரையாடப்பட்ட முக்கிய விடயங்கள்:
இச்சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி சிறிநாத், தமிழ் மக்களின் மிக முக்கிய கோரிக்கைகளை நிதியமைச்சரிடம் விரிவாக எடுத்துரைத்தார். குறிப்பாக:
- வரலாற்று மற்றும் ஆன்மீகச் சிறப்புமிக்க திருகோணேஸ்வரர் ஆலயத்தின் பாதுகாப்பு மற்றும் அடையாளத்தைப் பேணுதல்.
- இலங்கைத் தமிழர்களின் அரசியல் உரிமைகள், நிரந்தர அரசியல் தீர்வு மற்றும் சமகால அரசியல் சூழல்.
- தமிழ்நாட்டில் உள்ள முகாம்களில் வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழ் அகதிகளின் சமூக நலன் மற்றும் பாதுகாப்பு.
இக்கோரிக்கைகளைக் கேட்டறிந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக இதுவரை மேற்கொண்டுள்ள பல்வேறு நலத்திட்டங்களை சுட்டிக்காட்டினார். அத்துடன், இலங்கைத் தமிழ் மக்களின் எதிர்காலத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, தேவையான அனைத்து உதவிகளையும் இந்திய அரசு தொடர்ந்து வழங்கும் என உறுதியளித்தார்.
இக்கலந்துரையாடலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பாஜக தேசியச் செயலாளர் ம. வெங்கடேசன், ஆஸ்திரேலியத் தமிழ் காங்கிரஸின் தலைவர் கிருஷ்ணபிள்ளை இளங்கோ, அதன் முன்னாள் தலைவர் மனோகரன் மாணிக்கவிநாயகம் மற்றும் அமெரிக்கத் தமிழர் அமைப்பின் செயற்குழு உறுப்பினர் லவன் முத்து ஆகியோர் பங்கேற்றனர்.




