இந்திய அரசின் நிதியுதவியுடன், கொழும்பு கங்காராமய விகாரையில் பனை ஓலைச் சுவடிகளை இலக்கமயமாக்கும் SAMHiTA (தெற்காசியச் சுவடிகளின் வரலாறுகள் மற்றும் உரைக் காப்பகம்) திட்டம் கடந்த வெள்ளிக்கிழமை (ஒக்டோபர் 23) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
டெல்லியிலுள்ள இந்திய சர்வதேச நிலையம் (India International Centre – IIC), கொழும்பு கங்காராமய விகாரையுடன் இணைந்து இத்திட்டத்தை முன்னெடுக்கிறது. திட்டத்தின் ஆரம்ப நிகழ்விலும், விகாரை வளாகத்தில் இடம்பெற்ற கள ஆய்வு விஜயத்திலும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா கலந்துகொண்டார்.
கங்காராமய விகாரையின் பிரதம விகாராதிபதி வணக்கத்திற்குரிய கலாநிதி கிரிந்தே அஸ்ஸஜி தேரர், வணக்கத்திற்குரிய கலாநிதி பல்லேகம ரத்னசார தேரர், விகாரையின் அறங்காவலர்கள், திட்ட ஆலோசகர் பேராசிரியர் காமினி ரணசிங்க மற்றும் உள்ளூர் நிபுணர்கள் குழுவினர் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
தெற்காசியாவின் அறிவுசார் மற்றும் கலாசார மரபுகளைப் பாதுகாத்தல்
பண்டைய சுவடிகளை இலக்கமயமாக்குவதன் மூலமும், அவற்றில் பொதிந்துள்ள அறிவைப் பாதுகாப்பதன் மூலமும், தெற்காசியாவின் செழுமையான அறிவுசார் மற்றும் கலாசார மரபுகளை எதிர்காலச் சந்ததியினருக்காகப் பாதுகாப்பதே SAMHiTA திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
இந்தச் சுவடிகள் நாகரிகங்களின் அறிவுச் செல்வங்களைத் தாங்கி நிற்கும் களஞ்சியங்களாக விளங்குகின்றன. மொழிகள், தத்துவங்கள், மத மரபுகள், சடங்குகள், பழக்கவழக்கங்கள் மற்றும் கலை நடைமுறைகள் தொடர்பான பல்வேறு தகவல்களை அவை கொண்டுள்ளன.
கள ஆய்வு விஜயத்தின்போது, சுவடிகளைப் பாதுகாக்கும் பணிகள் மற்றும் அவற்றை இலக்கமயமாக்கும் செயல்முறை தொடர்பில் திட்ட ஆலோசகரும் நிபுணர்கள் குழுவினரும் விளக்கமளித்தனர்.
SAMHiTA திட்டத்துடன் இணைந்த இலங்கையின் முதலாவது நிறுவனம்
SAMHiTA திட்டத்தின் கீழ், இந்திய சர்வதேச நிலையத்துடன் இணைந்து செயற்படும் இலங்கையின் முதலாவது நிறுவனமாக கங்காராமய விகாரை திகழ்கிறது.
2026 ஜூலை மாதம், விகாரையில் பாதுகாக்கப்பட்டு வரும் பண்டைய சுவடிகளை இலக்கமயமாக்குவதற்காக இந்திய சர்வதேச நிலையமும் கங்காராமய விகாரையும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.
தற்போது இலங்கை நிபுணர்கள் குழுவின் தலைமையில் சுவடிகளை இலக்கமயமாக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இப்பணிகள் 2026 நவம்பர் மாத இறுதிக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா – இலங்கை பௌத்த மரபின் ஆழமான உறவைப் பிரதிபலிக்கும் திட்டம்
நிகழ்வில் உரையாற்றிய இந்திய
உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இத்திட்டத்திற்கு தலைமைத்துவத்தையும் வழிகாட்டலையும் வழங்கி வரும் வணக்கத்திற்குரிய கலாநிதி கிரிந்தே அஸ்ஸஜி தேரருக்கும், இம்முயற்சியில் அர்ப்பணிப்புடன் செயற்படும் பேராசிரியர் காமினி ரணசிங்க மற்றும் அவரது நிபுணர்கள் குழுவினருக்கும் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
இத்தகைய முயற்சிக்கு ஆதரவளிப்பதில் இந்திய அரசு பெருமையடைவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தத் திட்டம், பல நூற்றாண்டுகளாகத் தொடரும் ஆன்மிக, அறிவுசார் மற்றும் கலாசாரப் பரிமாற்றங்களின் அடிப்படையில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பகிரப்பட்டுள்ள ஆழமானதும் நீண்டகாலமாகத் தொடர்வதுமான பௌத்த மரபைப் பிரதிபலிப்பதாக அவர் தெரிவித்தார்.
2026 பெப்ரவரி மாதம், கங்காராமய விகாரையில் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட பகவான் புத்தரின் புனித தேவ்னிமோரி நினைவுச் சின்னங்கள் பொதுமக்களின் வழிபாட்டிற்காகக் காட்சிப்படுத்தப்பட்ட நிகழ்வையும் உயர்ஸ்தானிகர் நினைவுகூர்ந்தார். இந்த நிகழ்வு இரு நாடுகளின் மக்களையும் பக்தியுடனும் மரியாதையுடனும் ஒன்றிணைத்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.
ஏனைய நிறுவனங்களுக்கும் ஒத்துழைப்புக்கான அழைப்பு
பண்டைய சுவடிகளை இலக்கமயமாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள இலங்கையின் ஏனைய நிறுவனங்களும் SAMHiTA திட்டத்துடன் இணைந்து செயற்பட முன்வருமாறு இந்திய உயர்ஸ்தானிகர் அழைப்பு விடுத்தார்.
இத்தகைய முயற்சிகளுக்கு இந்திய அரசு மானிய நிதியுதவிகளை வழங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கங்காராமய விகாரையில் முன்னெடுக்கப்படும் இத்திட்டம் வெற்றியடைய வாழ்த்துத் தெரிவித்த உயர்ஸ்தானிகர், எதிர்காலத்தில் மேலும் பல சுவடித் தொகுப்புகளை உள்ளடக்கி, அவற்றைப் பாதுகாக்கும் வகையில் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என நம்பிக்கை வெளியிட்டார்.






