• Home
  • உலகச் செய்திகள்
  • இந்தியாவிற்குச் செல்லும் இலங்கை யாத்திரிகர்களுக்கான இந்திய விசா தொடர்பான  விளக்கத்தை வெளியிட்ட இந்திய உயர்ஸ்தானிகராலயம் 

இந்தியாவிற்குச் செல்லும் இலங்கை யாத்திரிகர்களுக்கான இந்திய விசா தொடர்பான  விளக்கத்தை வெளியிட்ட இந்திய உயர்ஸ்தானிகராலயம் 

ஹஸ்பர் ஏ.எச்-

இலங்கையர்களுக்கு காலதாமதமின்றி மற்றும் சுமூகமாக விசாக்களை வழங்குவது எமது நிலையான கொள்கையாகும். உலகின் பல நாடுகளைப் போலவே, இந்தியாவிற்குப் பயணிக்கும் இலங்கையர்களும் இ-விசா (E-Visa) வசதியைப் பெற முடியும். எனினும், இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக விண்ணப்பிக்க விரும்பும் இலங்கைப் பிரஜைகள், ஆன்லைனில் விண்ணப்பித்து, கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம், ஹம்பாந்தோட்டை மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்களில் அமைந்துள்ள இந்திய துணைத்தூதரக விண்ணப்ப மையங்களில் (Indian Consular Application Centres – ICAC) தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

  1. இந்தியாவிற்குப் புனித யாத்திரைக்காக, குறிப்பாக பௌத்த புனிதத் தலங்களுக்குச் செல்லும் இலங்கையர்களுக்கு, விசாக்கள் விரைவாக வழங்கப்படுகின்றன. இயன்றவரை, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் பரிந்துரைக்கப்படும் விண்ணப்பங்கள், 10 அல்லது அதற்கு மேற்பட்ட யாத்திரிகர்களைக் கொண்ட குழுக்களுக்கு கட்டணமின்றி (Gratis) வழங்கப்படுகின்றன.

இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்காகச் செயல்பட்ட விசா சேவை வழங்குநர் நிறுவனம் மாற்றப்பட்டிருந்த காரணத்தால், குறுகிய காலத்திற்கு இந்நடைமுறை நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது, 2026 ஜூலை 7 ஆம் தேதி முதல் புதிய சேவை வழங்குநர் தனது பணிகளைத் தொடங்கியுள்ளதையடுத்து, இலங்கை யாத்திரிகர்களுக்கான கட்டணமில்லா விசா வழங்கும் நடைமுறை மீண்டும் அறிமுகப்படுத்தப்படுகிறது.

முன்னர் இருந்த நடைமுறையைப் போலவே, இவ்வாறான கோரிக்கைகள் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஊடாக அனுப்பப்பட வேண்டும். 10 அல்லது அதற்கு மேற்பட்டோர் கொண்ட குழுவாக விண்ணப்பிக்க முடியும். மேலும், விண்ணப்பதாரர்கள் தங்களது உயிரியல் அடையாளத் தகவல்களை (Biometrics) பதிவு செய்வதற்காக குழுவாகவோ அல்லது தனித்தனியாகவோ தமக்குச் சௌகரியமான முறையில் ICAC மையங்களுக்கு வரலாம். இது இந்திய அரசின் புதிய விதிமுறைகளின் கீழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனினும், 12 வயது முதல் 70 வயது வரையிலானவர்களுக்கே உயிரியல் அடையாளப் பதிவு அவசியமாகும்.

  1. உயிரியல் அடையாளப் பதிவுக்காக ICAC மையங்களுக்கு வருகை தரும் ஏனைய மூத்த குடிமக்களுக்காக, அவர்களின் காத்திருப்பு நேரத்தை இயன்றவரை குறைக்கும் வகையில் சிறப்பு மற்றும் விரைவுபடுத்தப்பட்ட நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. உயிரியல் அடையாளத் தகவல்களைப் பதிவு செய்வதன் மூலம், அவர்கள் இந்தியாவிற்கு வந்தடைந்தபோது குடிவரவு செயல்முறைகளை சுலபமாகவும் வசதியாகவும் நிறைவு செய்ய முடியும்.
  2. மேலே குறிப்பிடப்பட்ட நடைமுறையின்படி விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் இலங்கை யாத்திரிகர்களுக்கு எந்தவித விசா கட்டணமும் இல்லை. எனவே, இலங்கை யாத்திரிகர்களுக்கான விசா கட்டணத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்ற கேள்வியே எழுவதில்லை. இருப்பினும், ICAC வழங்கும் சேவைகளுக்காக, விண்ணப்பதாரர்கள் இலங்கை ரூபாய் 1,855/- சேவைக் கட்டணத்தைச் செலுத்த வேண்டியுள்ளது.
Share the Post: