• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • இந்தியப் பிரஜைகளின் பல இலட்சம் ரூபாய் பணம் திருட்டு: இரு பெண்கள் கைதுநீதிமன்ற வளாக சிசிடிவி காட்சிகள் மூலம் பொலிஸார் தீவிர விசாரணை

இந்தியப் பிரஜைகளின் பல இலட்சம் ரூபாய் பணம் திருட்டு: இரு பெண்கள் கைதுநீதிமன்ற வளாக சிசிடிவி காட்சிகள் மூலம் பொலிஸார் தீவிர விசாரணை

(பாறுக் ஷிஹான்)

சம்மாந்துறை நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணைக்காக வருகை தந்த இந்தியப் பிரஜைகள் தவறவிட்ட சுமார் 31 இலட்சத்திற்கும் அதிகமான இலங்கை ரூபாய் பெறுமதியுடைய அமெரிக்க டொலர்களை   திருடிய குற்றச்சாட்டின் பேரில்  இரு பெண்கள் சம்மாந்துறைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டம்  சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கு ஒன்றிற்காக இந்தியா – தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவர்   வியாழக்கிழமை (24) வருகை தந்திருந்தனர்.

வழக்கு விசாரணையின் போது நீதவான் கோரிய சான்றாதாரத்தைக் காட்டுவதற்காக  நீதிமன்றிற்குள் நுழைவதற்கு முன்னர் கைத்தொலைபேசிகளை ஒப்படைத்து வைத்திருந்த இடத்திற்கு இந்தியப் பிரஜை ஒருவர் சென்றுள்ளார்.அங்குத் தனது கைத்தொலைபேசியைப் பெற்றுக்கொண்ட போது தான் கையில் வைத்திருந்த சுமார் 31 இலட்சம் இலங்கை ரூபாவிற்கும் அதிகமான அமெரிக்க டொலர் பணத்தைக் கொண்ட கடித உறையை அங்கே தவறுதலாக மறந்து வைத்துவிட்டு நீதிமன்றத்திற்கு  திரும்பியுள்ளார்.

குறித்த வழக்கு முடிவடைந்த பின்னர் கடித உறை ஞாபகத்திற்கு வரவே  உடனடியாகத் தொலைபேசியைப் பெற்ற உணவகப் பகுதிக்குச் சென்று தேடியுள்ளார். எனினும்  அங்குப் பணத்துடன் கூடிய கடித உறை காணப்படவில்லை.இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றதுடன் சட்டத்தரணி ஒருவரின் உதவியுடன் சம்மாந்துறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

முறைப்பாட்டிற்கு அமைவாக உடனடியாகச் செயற்பட்ட சம்மாந்துறைப் பொலிஸார்  அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நடமாடிய இரு பெண் சந்தேக நபர்களைக் கைது செய்து  மேலதிக விசாரணைக்காகச் சம்மாந்துறைப் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர்.

அத்துடன், சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி (CCTV) காணொளிக் காட்சிகளின் உதவியுடன் காணாமல்போன பணப்பையைக் கண்டறியும் நடவடிக்கைகளைப் பொலிஸார் முடுக்கிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share the Post: