இணையத்தளம் வாயிலாக நச்சு இரசாயனங்களை விற்பனை செய்து, பலரது உயிர் மாய்ப்புக்கு (தற்கொலைக்கு) உதவியதாகக் கூறப்படும் சர்வதேச வழக்கில், கனடாவைச் சேர்ந்த 60 வயதான கென்னத் லா (Kenneth Law) தன் மீதான குற்றச்சாட்டுகளை ஒன்டாரியோ நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.
முன்னாள் சமையல்காரரான இவர், தற்கொலை தொடர்பான ஆன்லைன் கலந்துரையாடல் தளங்கள் (Online Forums) மூலம் பழகிய சுமார் 40 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு 1,200க்கும் மேற்பட்ட நச்சு இரசாயனப் பொதிகளை விநியோகித்துள்ளதாக சர்வதேச புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன.
வெள்ளிக்கிழமை (மே 29) அன்று ஒன்டாரியோ நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது, அரசுத் தரப்புடன் ஏற்பட்ட சமரச உடன்படிக்கையின் (Plea Deal) ஒரு பகுதியாக இவர் தற்கொலைக்கு தூண்டிய அல்லது உதவிய 14 குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். இதனை அடுத்து, அவர் மீது முதற்கட்டமாக சுமத்தப்பட்டிருந்த கடுமையான ‘முதல் நிலை கொலைக் குற்றச்சாட்டுகளை’ (First-degree murder) திரும்பப் பெற்றுக்கொள்ள அரசுத் தரப்பு சம்மதித்துள்ளது.
கென்னத் லா விநியோகித்த நச்சுப் பொருட்களால் பிரிட்டனில் மட்டும் சுமார் 79 பேர் உயிரிழந்துள்ளனர். எனினும், பிரிட்டன் அரசு அவர் மீது தனியாக வழக்குத் தொடரவோ அல்லது அவரை நாடுகடத்தவோ முயலவில்லை. இது பாதிக்கப்பட்ட பிரிட்டன் குடும்பத்தினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பிரிட்டனின் ‘அரசு வழக்கறிஞர் திணைக்களம்’ (CPS) விளக்கம் அளிக்கையில்:
“கென்னத் லாவிற்கு கனடாவில் வழங்கப்படும் தண்டனையின் போது, பிரிட்டனில் நிகழ்ந்த 79 மரணங்களும் ‘ஒப்புக்கொள்ளப்பட்ட தண்டனை உண்மைகளின்’ (Agreed Sentencing Facts) கீழ் கணக்கில் கொள்ளப்படும். அவரை பிரிட்டனுக்கு நாடுகடத்த முயன்றால், அதற்கு எதிராக அவர் மேல்முறையீடு செய்யக்கூடும். அதற்குப் பல ஆண்டுகள் ஆகலாம் அல்லது ‘இரட்டைத் தண்டனைத் தடை’ (Double Jeopardy) கோட்பாட்டின் கீழ் அது முடக்கப்படலாம். எனவே, கனடாவின் தண்டனை செயல்முறையிலேயே பிரிட்டன் விக்டிம்களையும் இணைப்பதே நீதிக்கான விரைவான வழி” என்று தெரிவித்துள்ளது.
கோவிட் பெருந்தொற்றுக்கு பிறகு மனநலத்தால் பாதிக்கப்பட்டு, 2023 மார்ச்சில் உயிர் மாய்ப்பு செய்துகொண்ட 19 வயது ஆஷ்டினின் தாய் கிம் புரோசர் கூறுகையில், “யாரோ ஒருவர் சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் அமர்வதால் என் மகனை இழந்த வலி குறைந்துவிடாது” என நீதிமன்றத்திற்கு வெளியே கண்ணீருடன் தெரிவித்தார்.
கென்னத் லாவிடம் வெறும் 50 பவுண்டுகள் செலுத்தி நச்சுப் பொருளைப் பெற்று 2021 இல் உயிரிழந்த 22 வயது தாமஸின் தந்தை டேவிட் பார்ஃபெட் கூறுகையில், “கென்னத் லா குற்றத்தை ஒப்புக்கொண்டது நல்லதே எனினும், அவர் பிரிட்டன் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு என் மகனின் மரணத்திற்குப் பதிலளித்திருக்க வேண்டும்” எனத் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
பத்திரிகை ஒன்று நடத்திய ரகசிய புலனாய்வில் (Undercover Investigation), கென்னத் லா ஒரு வாடிக்கையாளர் போல பேசிய நிருபரிடம் தனது தயாரிப்புகளைப் பயன்படுத்தி “எவ்வாறு மரணத்தை உறுதி செய்வது” என்று ஆலோசனை வழங்கியது அம்பலமானது. இதனைத் தொடர்ந்து, பிரிட்டன், இத்தாலி, அமெரிக்கா உள்ளிட்ட சுமார் 12 நாடுகளின் புலனாய்வு அமைப்புகளின் கூட்டு விசாரணையின் பின்னர், 2023 மே மாதம் இவர் கைது செய்யப்பட்டார்.
கனடா சட்டப்படி தற்கொலைக்கு உதவி செய்த குற்றத்திற்கு அதிகபட்சமாக 14 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்ற நிலையில், இந்த சர்வதேச அளவிலான மரணங்களை ஒப்பிட்டு இவருக்கு வழங்கப்படவுள்ள இறுதித் தண்டனை விவரம் வரும் செப்டம்பர் மாதமளவில் அறிவிக்கப்படவுள்ளது.




