• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மேலும் மூன்று ஏழை குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் கையளிப்பு

வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மேலும் மூன்று ஏழை குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் கையளிப்பு

ஹஸ்பர் ஏ.எச்-

​திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் மற்றும் இறக்கக்கண்டி ஆகிய கிராமங்களில், வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு மக்கள் சேவை மன்றத்தினால் (PSC) நிர்மாணிக்கப்பட்ட புதிய நிரந்தர வீடுகள் கையளிக்கும் நிகழ்வு நேற்று  நடைபெற்றது.

​மக்கள் சேவை மன்றத்தின் தலைவர் எம். ரீ . முகமம்து பாரிஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், அவுஸ்திரேலியாவில் வசிக்கும் பிரபல சமூக ஆர்வலரும் கொடையாளருமான  திரு. ஜி. கந்தகுமார் அவர்களின் நிதிப் பங்களிப்பில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன. திரு. கந்தகுமார் அவர்களின் பங்களிப்பில், இதுவரை தலா சுமார் 1.5 மில்லியன் ரூபாய் பெறுமதியில் 5 நிரந்தர வீடுகள் சகல மலசலகூட வசதிகளுடனும் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டுள்ளன.

நிகழ்வில் உரையாற்றிய தலைவர் எம். ரீ . முகம்மது பாரிஸ், “வறுமையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிரந்தர வாழ்விடங்களை அமைத்துக் கொடுப்பதில் நாம் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம். திரு. ஜி. கந்தகுமார் போன்ற கொடையாளர்களின் ஒத்துழைப்பு, இத்தகைய மக்கள் நலப் பணிகளைச் சிறப்பாக முன்னெடுக்கப் பெரும் பலமாக உள்ளது,” என்று தெரிவித்தார்.

தமது வாழ்நாள் கனவான நிரந்தரக் குடியிருப்பு வசதியைப் பெற்றுக்கொண்ட பயனாளிகள், மக்கள் சேவை மன்றத்திற்கும் கொடையாளருக்கும் தமது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்தனர். 

சமூக மேம்பாட்டை இலக்காகக் கொண்டு இயங்கும் மக்கள் சேவை மன்றம், உள்ளூர் மற்றும் சர்வதேச கொடையாளர் நிறுவனங்களின் பங்களிப்புடன் இதுவரை 250 வரை நிரந்தர வீடுகளை நிர்மாணித்து சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் அவுஸ்திரேலியாவில் இருந்து வருகை தந்திருந்த இத்திட்டத்தின் கொடையாளர் திரு ஜி. கந்தகுமார், மக்கள் சேவை மன்றத்தின் தலைவர் எம். ரீ . முகமம்து பாரிஸ், அதன் திட்ட ஒருங்கிணைப்பாளர் எம். பி. குவைஸர், தம்பலகாமம் பிரதேச செயலக  அதிகாரிகள், கோவில் நிர்வாகத்தினர், பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share the Post: