• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • வரலாற்று உச்சத்தைத் தொட்ட மே மாத சுற்றுலாப் பயணிகள் வருகை: டொலர் வருமானம் வீழ்ச்சி, ரூபாய் வருமானம் அதிகரிப்பு!

வரலாற்று உச்சத்தைத் தொட்ட மே மாத சுற்றுலாப் பயணிகள் வருகை: டொலர் வருமானம் வீழ்ச்சி, ரூபாய் வருமானம் அதிகரிப்பு!

இலங்கையின் சுற்றுலாத் துறை வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில், கடந்த மே மாதத்தில் அதிகளவிலான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து சாதனை படைத்துள்ளனர். இருப்பினும், அமெரிக்க டொலருக்கு நிகரான வருமானத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மற்றும் மத்திய வங்கி தரவுகள் தெரிவிக்கின்றன.

சுற்றுலாப் பயணிகளின் வருகை: கடந்த மே மாதத்தில் 145,745 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். இது 2025 ஆம் ஆண்டின் மே மாதத்துடன் ஒப்பிடுகையில் 9.65% அதிகரிப்பாகும். இலங்கை வரலாற்றில் மே மாதமொன்றில் பதிவான அதிகூடிய வருகை இதுவாகும்.

டொலர் வருமான வீழ்ச்சி: கடந்த ஆண்டு மே மாதத்தில் 164.1 மில்லியன் அமெரிக்க டொலர்களாகக் காணப்பட்ட சுற்றுலா வருமானம், இந்த ஆண்டு மே மாதத்தில் 155.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாக 5.11% வீழ்ச்சியடைந்துள்ளது.

ரூபாய் வருமான உயர்வு: டொலர் வருமானம் குறைந்தாலும், இலங்கை ரூபாய் மதிப்பில் இவ்வருமானம் 49.1 பில்லியன் ரூபாயிலிருந்து 50.6 பில்லியன் ரூபாயாக 3.05% அதிகரித்துள்ளது. இலங்கை ரூபாய்க்கு எதிராக அமெரிக்க டொலரின் மதிப்பு வலுவடைந்தமையே இதற்கு முதன்மைக் காரணமாகும்.

மத்திய வங்கியின் அறிக்கையின்படி, 2026ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் (ஜனவரி – மே) ஒட்டுமொத்த சுற்றுலா வருமானம் 1.36 பில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது. இது 2025ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் (1.54 பில்லியன் அமெரிக்க டொலர்கள்) ஒப்பிடுகையில் 11.9% வீழ்ச்சியாகும்.

Share the Post: