திருகோணமலை மாவட்டத்தில் சிறுபோக நெல் அறுவடை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், நெல்லுக்குப் போதிய விலை கிடைக்காமையால் விவசாயிகள் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர்.
தோப்பூர், கிளிவெட்டி, வெருகல், மூதூர், சேருவில மற்றும் சம்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் தற்போது அறுவடை நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. இருப்பினும், கடந்த போகத்துடன் ஒப்பிடுகையில் இம்முறை நெல் மிகவும் குறைந்த விலையிலேயே கொள்வனவு செய்யப்படுவதாக விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கல்லாறு மற்றும் கிளிவெட்டி பகுதிகளில் அரசாங்கத்திற்குச் சொந்தமான நெல் களஞ்சியசாலைகள் காணப்படுகின்ற போதிலும், இதுவரை அங்கு நெல் கொள்வனவு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவில்லை. இதன் காரணமாக, வேறு வழியின்றித் தமது அறுவடைகளைத் தனியார் வர்த்தகர்களிடம் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
உரம், எரிபொருள் மற்றும் விவசாய உபகரணங்களின் விலையேற்றத்தால் இம்முறை பயிர்ச்செய்கைக்கான செலவு கணிசமாக அதிகரித்துள்ளது. அதிக மூலதனமிட்டு விவசாயம் செய்த போதிலும், நியாயமான விலை கிடைக்காததால் பெரும் நிதி இழப்பைச் சந்திக்க வேண்டியுள்ளதாகப் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
எனவே, அரசாங்கம் உடனடியாகத் தலையிட்டு அரசாங்க நெல் களஞ்சியசாலைகள் ஊடாக நெல் கொள்வனவை ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பதுடன், நெல்லுக்கான நியாயமான உத்தரவாத விலையையும் உறுதி செய்ய வேண்டும் எனத் திருகோணமலை மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






