• Home
  • ›
  • உலகச் செய்திகள்
  • ›
  • இந்தியக் கடற்படையின் முதலாவது பயிற்சிப் படைப்பிரிவு கொழும்புக்கு விஜயம்

இந்தியக் கடற்படையின் முதலாவது பயிற்சிப் படைப்பிரிவு கொழும்புக்கு விஜயம்

இந்தியக் கடற்படையின் முதலாவது பயிற்சிப் படைப்பிரிவில் (First Training Squadron – 1TS) அங்கம் வகிக்கும் இந்தியக் கடற்படைக் கப்பல்களான திர் (Tir), சுஜாதா (Sujata) மற்றும் இந்தியக் கரையோரக் காவல் படைக் கப்பலான சாரதி (Sarathi) ஆகியவை 2026 ஒக்டோபர் 26 முதல் 28ஆம் திகதி வரை நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்புத் துறைமுகத்திற்கு வருகை தரவுள்ளன.

நீண்டதூரப் பயிற்சிப் பயணத்தின் ஒரு பகுதியாக இந்த விஜயம் இடம்பெறுவதுடன், சீஷெல்ஸ் நாட்டின் விக்டோரியா துறைமுகம் மற்றும் மாலைதீவின் மாலே துறைமுகம் ஆகியவற்றுக்கான விஜயங்களைத் தொடர்ந்து, இக்கப்பல்கள் தமது தளத் துறைமுகமான கொச்சிக்குத் திரும்பவுள்ளன.

 இந்தியக் கடற்படை, இந்தியக் கரையோரக் காவல் படை மற்றும் நட்பு நாடுகளின் கடற்படை அதிகாரிகளாகப் பயிற்சி பெறுவோருக்கு ஆரம்பகட்ட கடல் பயிற்சிகளை வழங்குவது முதலாவது பயிற்சிப் படைப்பிரிவின் முக்கிய பொறுப்பாகும்.

இந்தப் படைப்பிரிவு, கப்டன் டிஜோ கே. ஜோசப் (Captain Tijo K Joseph) அவர்களின் தலைமையில் இயங்குகிறது. இவர் முதலாவது பயிற்சிப் படைப்பிரிவின் சிரேஷ்ட அதிகாரியாகவும், INS Tir கப்பலின் கட்டளை அதிகாரியாகவும் பணியாற்றுகிறார்.

2026 மார்ச் மாதத்தில், இதே பயிற்சிப் படைப்பிரிவின் மற்றுமொரு கப்பலான INS Tarangini இலங்கைக்கு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் கல்லூரியில் (Naval and Maritime Academy – NMA) பயிற்சி பெறும் இலங்கை கடற்படை அதிகாரிப் பயிலுநர்களுக்கு கடலில் பயணம் செய்வதற்கான பயிற்சிகளையும் அனுபவங்களையும் வழங்கும் நோக்கில் அந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டது.

3இந்தியக் கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்தை வந்தடையும் போது, இலங்கை கடற்படையின் பயிற்சிப் பிரிவுக்குப் பொறுப்பான பணிப்பாளர் நாயகமான ரியர் அட்மிரல் ரோஹன் ஜோசப், கப்பல்களுக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இதன்போது, கப்பல்களின் கட்டளை அதிகாரிகள், பயிற்சி அதிகாரிகள் மற்றும் பயிற்சியாளர்களுடன் அவர் கலந்துரையாடவுள்ளார். இந்த நீண்டதூரப் பயிற்சிப் பயணத்தில் இலங்கை கடற்படையைச் சேர்ந்த ஐந்து பயிற்சியாளர்களும் பங்கேற்கின்றனர்.

முதலாவது பயிற்சிப் படைப்பிரிவின் மூத்த அதிகாரி மற்றும் கப்பல்களின் கட்டளை அதிகாரிகள், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர்  சந்தோஷ் ஜா (H.E. Shri Santosh Jha) மற்றும் இலங்கை கடற்படையின் மேற்கு கடற்படைப் பிராந்தியத் தளபதியான ரியர் அட்மிரல் ஹர்ஷ டி சில்வா ஆகியோரையும் சந்திக்கவுள்ளனர்.

இந்தியக் கடற்படையின் அதிகாரிப் பயிற்சியாளர்கள், இலங்கை கடற்படையினருடன் தொழில்சார் பயிற்சிகள், கல்வி சார்ந்த நடவடிக்கைகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு பரிமாற்ற நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக, இந்தியக் கடற்படைப் பயிற்சியாளர்கள் திருகோணமலையிலுள்ள கடற்படை மற்றும் கடல்சார் கல்லூரிக்கும், இலங்கை கடற்படைப் பயிற்சியாளர்கள் இந்தியாவின் பயிற்சிக் கப்பல்களுக்கும் பரஸ்பர விஜயங்களை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் திட்டமிடப்பட்டுள்ளன.

மேலும், இந்தியக் கடற்படை மற்றும் இலங்கை கடற்படையின் இசைக்குழுக்கள் இணைந்து வழங்கும் கூட்டு இசை நிகழ்ச்சி 2026 ஒக்டோபர் 27ஆம் திகதி காலி முகத்திடலில் (Galle Face Green) நடைபெறவுள்ளது.

இந்தியக் கடற்படை மற்றும் கரையோரக் காவல் படைக் கப்பல்கள் இலங்கைக்கு மேற்கொள்ளும் இவ்வாறான விஜயங்கள், இரு நட்பு நாடுகளின் கடற்படைகளுக்கும் இடையிலான வலுவான உறவுகளை மேலும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

இந்த நடவடிக்கைகள் இந்தியாவின் ‘அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை’ (Neighbourhood First) என்ற கொள்கைக்கும், பிராந்தியங்கள் முழுவதும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான பரஸ்பர மற்றும் முழுமையான முன்னேற்றத்தை வலியுறுத்தும் ‘மஹாசாகர்’ (MAHASAGAR – Mutual and Holistic Advancement for Security and Growth Across Regions) என்ற தொலைநோக்குப் பார்வைக்கும் அமைவாக முன்னெடுக்கப்படுகின்றன.

Share the Post:

Related Posts

உள்ளூர் செய்திகள்

மட்டக்களப்பு  கடற்றொழில் திணைக்கள ஒரு சில பரிசோதகர்களின் அனுசரனையுடன் சட்டவிரோத சுருக்குவலை பாவித்து மீன் பிடிக்கின்றனர்– மட்டு ஊழல் மோசடி மற்றும் போதை பொருளுக்கு எதிரான அமைப்பு குற்றச்சாட்டு–