ஸ்பெயினின் வலென்சியா மாகாணத்தில் உள்ள புஞ்ஞோல் (Buñol) நகரில் உலகப் புகழ்பெற்ற ‘லா டொமாட்டினா’ (La Tomatina) தக்காளித் திருவிழா மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் ஒகஸ்ட் மாதத்தின் இறுதிப் புதன்கிழமையன்று கொண்டாடப்படும் இந்த உன்னதமான விழாவில், உலகம் முழுவதிலுமிருந்து வருகை தந்த ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளும் உள்ளூர் மக்களும் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்.

சுமார் 120 தொன்னுக்கும் அதிகமான பழுத்த தக்காளிகள் லாரிகள் மூலம் வீதிகளுக்குக் கொண்டுவரப்பட்டு வீசப்பட்டன. சரியாக ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்தத் தக்காளிச் சமரில் பங்கேற்பாளர்கள் ஒருவர் மீது ஒருவர் தக்காளிகளை வீசி மகிழ்ந்ததால், புஞ்ஞோல் நகர வீதிகள் முழுவதும் தக்காளிச் சாற்றினால் சிவந்து காணப்பட்டன.
பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் நுழைவுச் சீட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டு வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையிலான பங்கேற்பாளர்களுடன் மட்டுமே இந்த விழா நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






