அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மீறி, நோயாளிகளிடம் முழுமையான இரத்தப் பரிசோதனைக்காக (FBC) மேலதிகக் கட்டணம் வசூலித்த குற்றச்சாட்டில், யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு ரூ.30 இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், கண்டர்மடம் – பாலாலி வீதியில் அமைந்துள்ள வீனஸ் ஸ்பெஷாலிட்டி வைத்தியசாலை (Venus Speciality Hospital (Pvt) Ltd) மீதே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை (CAA) தெரிவித்துள்ளது.
சம்பந்தப்பட்ட வைத்தியசாலையில் கடந்த ஜூலை 13ஆம் திகதி நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரிகளால் விசேட சோதனை நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட ரூ.400 கட்டணத்திற்கு பதிலாக, FBC இரத்தப் பரிசோதனைக்கு ரூ.550 வசூலிக்கப்பட்டமை கண்டறியப்பட்டது.
இந்த முறைகேடு தொடர்பாக நுகர்வோர் விவகார அதிகார சபையினால் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த ஜூலை 21ஆம் திகதி இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, வைத்தியசாலைத் தரப்புத் தங்களது குற்றத்தை ஒப்புக்கொண்டது.
இதனைத் தொடர்ந்து, நீதிமன்றம் குறித்த தனியார் வைத்தியசாலைக்கு ரூ.30 இலட்சம் அபராதம் விதித்தது. மேலும், இந்த அபராதம் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பினை வைத்தியசாலையின் சொந்தச் செலவில் தேசியப் பத்திரிகைகளில் பிரசுரிக்க வேண்டும் எனவும் நீதவான் உத்தரவிட்டார்.
தனியார் வைத்தியசாலைகள் மற்றும் ஆய்வகங்களில் சேவைகளைப் பெறும் போது, அரசாங்கம் நிர்ணயித்துள்ள கட்டணங்களைச் சரிபார்த்துக்கொள்ளுமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. அத்துடன், அனைத்துச் சேவைகளுக்கும் கட்டாயம் உத்தியோகபூர்வ பற்றுச்சீட்டை (Official Receipt) பெற்றுக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதிக கட்டணம் வசூலிக்கும் சம்பவங்கள் ஏதேனும் இடம்பெற்றால், நுகர்வோர் விவகார அதிகார சபையின் 1977 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்புகொண்டு முறைப்பாடு செய்யுமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.




