இந்தியாவின் சென்னை – கோயம்பேடு பகுதியில், இரவு விடுதி ஒன்றில் ஏற்பட்ட தகராறின் பின்னணியில் 18 வயதுடைய இலங்கைத் தமிழ் யுவதி ஒருவர் கார் ஏற்றிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் பகுதியில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் ஒன்றில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்த 18 வயதுடைய யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த யுவதி தனது நண்பர் ஒருவரைச் சந்திப்பதற்காக சென்னைக்கு வந்துள்ளார். கடந்த சனிக்கிழமை இரவு அவர் தனது நண்பர்களுடன் இணைந்து வடபழனி பகுதியில் உள்ள இரவு விடுதி (Night Club) ஒன்றிற்குச் சென்றுள்ளார். இதன்போது, அங்கு வந்திருந்த பிறிதொரு குழுவினருடன் இவர்களுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. நிலைமை மோசமடைந்ததைத் தொடர்ந்து, விடுதி நிர்வாகத்தினர் இரு தரப்பினரையும் அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர்.
இருப்பினும், விடுதிக்கு வெளியேயும் இந்த வாக்குவாதம் தொடர்ந்து நீடித்துள்ளது. இதன் பின்னர், பாதிக்கப்பட்ட யுவதியும் அவரது நண்பர்களும் தங்களது இருசக்கர வாகனங்களில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளனர். இதன்போது, அவர்களைப் பின்தொடர்ந்து காரில் வந்த எதிர்த்தரப்புக் குழுவினர், கோயம்பேடு பகுதியில் வைத்து அவர்களது இருசக்கர வாகனத்தை அதிவேகமாகக் காரால் மோதித் தள்ளியுள்ளனர்.
இவ்விபத்தில் குறித்த இலங்கை யுவதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன், அவருடன் பயணித்த மற்றுமொருவர் பலத்த காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் இரவு விடுதி மற்றும் வீதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி (CCTV) கேமரா காட்சிகளின் அடிப்படையில் சென்னை பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். இதன் முதற்கட்டமாக பாலகுரு என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட மேலதிக விசாரணைகளின் படி, இக்கொலைச் சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான சுமன் சக்திவேல் மற்றும் அவரது நண்பர்கள் உட்பட கார் ஓட்டி வந்த 6 பேரையும் பொலிஸார் தற்போது கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




