• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • 30 ஆண்டுகளின் பின் இணைந்த கிழக்குப் பல்கலைக்கழக பட்டதாரிகள்: சமூகப் பொறுப்புணர்வுடன் பிரமாண்ட மீள்சந்திப்பு!

30 ஆண்டுகளின் பின் இணைந்த கிழக்குப் பல்கலைக்கழக பட்டதாரிகள்: சமூகப் பொறுப்புணர்வுடன் பிரமாண்ட மீள்சந்திப்பு!

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 1994/95 கல்வியாண்டைச் சேர்ந்த வர்த்தக முகாமைத்துவ பீட பட்டதாரிகள், பல்கலைக்கழகத்தில் இணைந்து 30 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டுப் பிரமாண்டமான மீள்சந்திப்பு நிகழ்வொன்றை அண்மையில் மயிலம்பாவெளி Chill Hutz விடுதியில் சிறப்பாக நடத்தினர்.

கடந்த 1996 ஆம் ஆண்டு பல்கலைக்கழகக் கல்வியைத் தொடங்கி, 2000 ஆம் ஆண்டு பட்டம் பெற்று வெளியேறிய இப்பட்டதாரிகள், சுமார் 26 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே இடத்தில் சந்தித்துப் பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டதோடு, சமூகப் பொறுப்புணர்வை வெளிப்படுத்தும் பல பயனுள்ள நலத்திட்டங்களையும் நடைமுறைப்படுத்தியுள்ளனர்.

பட்டதாரிகளின் சொந்த நிதிப் பங்களிப்பின் மூலம் பின்வரும் சமூக நலத் திட்டங்கள் வெற்றிகரமாகச் செய்து முடிக்கப்பட்டன:

  • உளவள புனர்வாழ்வு நிலைய உணவக மேம்பாடு: மாவடிவேம்பு பிராந்திய உளவள புனர்வாழ்வு நிலையத்தின் (Mental Health Rehabilitation Centre) உணவக வசதிகளை மேம்படுத்துவதற்காக ரூ. 250,000 பெறுமதியான திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
  • பாடசாலைக்கு நவீன புகைப்பட நகலெடுக்கும் இயந்திரம்: இலுப்படிச்சேனை அம்மாள் மகா வித்தியாலயத்தின் மாணவர் நலன் கருதி ரூ. 350,000 பெறுமதியான நவீன Photocopier இயந்திரம் வழங்கி வைக்கப்பட்டது.
  • சர்வதேச ஆய்வு மாநாட்டிற்கு நிதி அனுசரணை: கிழக்குப் பல்கலைக்கழக வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் சர்வதேச ஆய்வு மாநாட்டிற்கு (International Research Conference) ரூ. 100,000 நிதி அனுசரணை வழங்கப்பட்டது.

இந்நிகழ்வின் ஒரு பகுதியாக, வர்த்தக முகாமைத்துவ பீடாதிபதி திரு. ந. ராஜேஷ்வரன் தலைமையில், சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மற்றும் 1994/95 கல்வியாண்டு பட்டதாரிகளுக்கு இடையிலான விசேட கலந்துரையாடலும் அனுபவப் பகிர்வும் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கிழக்குப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் ப. பிரதீபன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும், முன்னாள் பீடாதிபதி திரு. என். யோகேஸ்வரன் உள்ளிட்ட சிரேஷ்ட விரிவுரையாளர்கள் பலரும் பங்கேற்றனர்.

இக்கலந்துரையாடலின் போது, பல்கலைக்கழகத்தில் பெற்ற கல்வி தங்களின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் தொழில் வாழ்க்கையிலும், சமூகத்திலும் உயர்வடைய எவ்வாறு வழிகோலியது என்பதைப் பட்டதாரிகள் பகிர்ந்துகொண்டனர். அத்துடன் பீடத்தின் எதிர்கால வளர்ச்சிக்குத் தேவையான ஆக்கபூர்வமான கருத்துக்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளையும் (Best Practices) முன்வைத்துத் தங்களை உருவாக்கிய தாய் பல்கலைக்கழகத்திற்கு நன்றியையும் பாராட்டைத் தெரிவித்தனர்.

தற்போது உலகளவில் பல்வேறு நாடுகளிலும், இலங்கையின் பல பாகங்களிலும் வாழ்ந்து வரும் முன்னாள் மாணவர்கள் நேரடியாக இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். வெளிநாடுகளில் வசிக்கும் பலர் இணையவழி (Online) மூலமாக இணைந்து இந்நிகழ்வில் உற்சாகமாகப் பங்கேற்றனர்.

நிகழ்வின் தொடர்ச்சியாக, பட்டதாரிகள் தாங்கள் கல்வி கற்ற பல்கலைக்கழக வளாகத்தின் பல பகுதிகளையும், மாணவர் விடுதிகளையும் நேரில் சென்று பார்வையிட்டுத் தங்களின் மாணவப் பருவ நினைவுகளை மீட்டெடுத்தனர்.

தற்போதைய கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ப. பிரதீபன் அவர்களும் இதே 1994/95 கல்வியாண்டில் பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தின் மாணவராகக் பயின்றவர் என்பது இந்நிகழ்வின் மற்றொரு குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாக அமைந்தது.

30 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பு, பழைய நட்புகளைப் புதுப்பித்ததோடு மட்டுமல்லாமல், சமூகத்திற்குத் திரும்பக் கொடுக்கும் நற்பண்பையும் வெளிப்படுத்திய அர்த்தமுள்ள நிகழ்வாக அமைந்தது.

Share the Post: