• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • வந்தாறுமூலையில் தரம் 5 மாணவர்களுக்கான இரண்டாம் கட்ட செயலமர்வு: பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் பங்கேற்பு!

வந்தாறுமூலையில் தரம் 5 மாணவர்களுக்கான இரண்டாம் கட்ட செயலமர்வு: பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் பங்கேற்பு!

தாயக ஊற்று அமைப்பின் ஏற்பாட்டில், அமைப்பின் ஸ்தாபகத் தலைவரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வைத்தியர் இ.சிறிநாத் அவர்களின் நெறிப்படுத்தலிலும், தாயக ஊற்று அமைப்பின் உறுப்பினரும் வந்தாறுமூலை கண்ணகி சனசமூக நிலையத் தலைவரும் சமூக ஆர்வலருமான கி.சந்திரகுமார் அவர்களின் நிதி அனுசரணையில் மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட ஏறாவூர்பற்று கல்விக் கோட்டத்தின் கீழ் உள்ள வந்தாறுமூலை மற்றும் பலாச்சோலை ஆகிய கிராமத்தில் உள்ள பாடசாலைகளில் 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள சுமார் 120 மாணவர்களுக்கான இரண்டாம் கட்ட வலுவூட்டல் செயலமர்வு 13.07.2026. அன்று வெற்றிகரமாக நடாத்தப்பட்டது.

​​இவ் வருடம் புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்ட இச் செயலமர்வு மட்/ககு/வந்தாறுமூலை கணேஷ வித்தியாயத்தில் நடைபெற்றது.

​மட்டக்களப்பு பிரதேசத்தின் பிரபல வளவாளரான திரு.கே.ரிசீகரன் அவர்கள் மாணவர்களுக்கான வழிகாட்டல்களையும் பயிற்சிகளையும் வழங்கினார்.

​பங்கெடுத்த மாணவர்களின் கற்றல் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், கடந்த கால வினா-விடை கையேடுகள் மற்றும் கற்றல் கோப்புகள் என்பன இதன்போது இலவசமாக வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த மாணவர்களுக்கான செயலமர்வின் முதலாம் கட்ட செயலமர்வு கடந்த 29.06.2026 அன்று நடைபெற்றதுடன் அடுத்த கட்ட இறுதிச் செயலமர்வு எதிர்வரும் 26.07.2026 அன்று மட்/ககு/வந்தாறுமூலை கணேஷ வித்தியாலயத்திலேயே நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

​இந் நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தாயக ஊற்று அமைப்பின் ஸ்தாபகத் தலைவருமான வைத்தியர் இ.சிறிநாத், ஏறாவூர்பற்று பிரதேச சபை உறுப்பினர் கே.நாகேந்திரன், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், வளவாளர்கள், தாயக ஊற்று அமைப்பின் உறுப்பினரும் வந்தாறுமூலை கண்ணகி சனசமூக நிலையத் தலைவரும் சமூக ஆர்வலருமான கி.சந்திரகுமார், தாயக ஊற்று அமைப்பு உறுப்பினர்கள், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

Share the Post: