பாறுக் ஷிஹான்
சிலோன் மீடியா போரத்தினால் (Ceylon Media Forum) வடிவமைக்கப்பட்டுள்ள “இலங்கை ஊடகவியலாளர் நம்பிக்கை நிதியம்” (Sri Lanka Journalists Trust Fund) ஸ்தாபிப்பதற்கான உத்தியோகபூர்வ திட்ட முன்மொழிவு அறிக்கை, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபயவிக்ரம அவர்களிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டுள்ளது.
நேற்று திங்கட்கிழமை (28) அம்பாறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற இச் சந்திப்பின் போது, சிலோன் மீடியா போரத்தின் தலைவர் கலாநிதி றியாத் ஏ. மஜீத்தினால் இத் திட்ட முன்மொழிவு வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட உதவி அஞ்சல் அத்தியட்சகரும் சிலோன் மீடியா போரத்தின் ஆலோசகருமான யூ.எல்.எம். பைசர் உடனிருந்தார்.
இச் சந்திப்பின் போது, நாட்டின் மூவின ஊடகவியலாளர்களின் நலன்களைப் பாதுகாக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள “இலங்கை ஊடகவியலாளர் நம்பிக்கை நிதியம்” என்பதன் நோக்கம், செயற்பாடுகள் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து அரசாங்க அதிபருக்குத் தெளிவுபடுத்தப்பட்டது.
அத்துடன், அம்பாறை மாவட்டத்தில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் பணியாற்றிக் கொண்டிருக்கும் பிராந்திய ஊடகவியலாளர்களுக்கான வீடமைப்புத் திட்டமொன்றை முன்னெடுப்பது குறித்தும் அரசாங்க அதிபருடன் விரிவாகக் கலந்துரையாடப்பட்டு ஆலோசனைகள் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




