ஹஸ்பர் ஏ.எச்-
2026 ஜூலை 13 முதல் 17 வரை, இலங்கை நாடாளுமன்ற அதிகாரிகள் 24 பேரைக் கொண்ட குழுவொன்று இந்தியாவின் புதுடெல்லியில் அமைந்துள்ள Parliamentary Research and Training Institute for Democracies (PRIDE) நிறுவனத்தில் நடைபெற்ற அறிமுக மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சித் திட்டத்தில் பங்கேற்றது. இக்குழுவிற்கு இலங்கை நாடாளுமன்றத்தின் உதவிச் செயலாளர் நாயகம் ஹேரத் முதியன்சலாகே ஹன்ச ஹேமமாலக சமீர அபேயரத்ன தலைமையேற்றார்.
இந்திய நாடாளுமன்ற அமைப்பின் நிறுவன கட்டமைப்பு, குழு முறைமை உள்ளிட்ட அம்சங்களை அறிமுகப்படுத்துவதே இந்த வாரம் முழுவதுமான பயணத்தின் நோக்கமாகும்.
பயிற்சித் திட்டம் PRIDE நிறுவனத்தின் வரவேற்பு மற்றும் அறிமுக அமர்வுடன் ஆரம்பமானது. தொடர்ந்து, இந்திய நாடாளுமன்ற செயலகத்தின் நிர்வாக அமைப்பு மற்றும் அதன் பணிகள் குறித்து விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன. இதில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான நலன்புரி சேவைகள், உறுப்பினர் சேவைகள் மற்றும் உறுப்பினர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான பிரிவுகளின் பணிகள் குறித்து பங்கேற்பாளர்கள் அறிந்துகொண்டனர்.
மேலும், நாடாளுமன்ற சிறப்புரிமைகள், நடைமுறை மற்றும் மரியாதை விதிகள், நெறிமுறைகள் மற்றும் இராஜதந்திர வழிகாட்டுதல்கள், நிதி மற்றும் பிற நாடாளுமன்றக் குழுக்களின் செயற்பாடுகள், கூட்டு மற்றும் தெரிவுக்குழுக்கள் (Joint and Select Committees) ஆகியவற்றின் செயற்பாடுகள் குறித்தும் அமர்வுகள் இடம்பெற்றன. குறிப்பாக, துறைசார் நிலைக்குழுக்கள் (Departmentally Related Standing Committees – DRSCs) குறித்து விரிவாக விளக்கப்பட்டது.
அதற்கு மேலாக, நாடாளுமன்ற செயலகத்தின் வரவு-செலவுத் திட்டம் தயாரிக்கும் நடைமுறைகள், ஒருங்கிணைந்த நிதிப் பிரிவு (Integrated Finance Unit – IFU) மற்றும் Budget and Parliament (B&P) பிரிவுகளின் பங்களிப்புகள் பற்றியும் பங்கேற்பாளர்கள் அறிந்துகொண்டனர்.
இந்தப் பயிற்சியின் ஒரு பகுதியாக, இந்திய நாடாளுமன்ற வளாகத்திற்கான வழிகாட்டப்பட்ட சுற்றுப்பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்போது, லோக்சபா மற்றும் ராஜ்யசபா அரங்குகள் மற்றும் நாடாளுமன்ற கலைக்காட்சியகங்கள் ஆகியவற்றைப் பார்வையிட்டனர். மேலும், இந்தியாவின் பண்பாட்டு மரபுகளை அறியும் வகையில், ஆக்ராவில் அமைந்துள்ள தாஜ்மகால் மற்றும் ஆக்ரா கோட்டை ஆகிய இடங்களுக்கும் குழுவினர் விஜயம் மேற்கொண்டனர்.
இந்தப் பயணம், இந்தியாவும் இலங்கையும் நாடாளுமன்ற மட்டத்திலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கும், அபிவிருத்தி அனுபவங்களை பரிமாறிக்கொள்வதற்கும் கொண்டுள்ள தொடர்ச்சியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது. மேலும், இரு நாடுகளுக்குமிடையிலான திறன் மேம்பாடு மற்றும் நிறுவனங்களுக்கிடையிலான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தையும் இது வலியுறுத்துகிறது.






