• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • போதைப்பொருள் ஒழிப்பு, சுயதொழில் வழிகாட்டல் மையமாக மாறவுள்ள EFO இன் புதிய கட்டடம்; அடிக்கல் நடும் விழா நஸீர் தலைமையில் நேற்று சிறப்பாய் இடம்பெற்றது!

போதைப்பொருள் ஒழிப்பு, சுயதொழில் வழிகாட்டல் மையமாக மாறவுள்ள EFO இன் புதிய கட்டடம்; அடிக்கல் நடும் விழா நஸீர் தலைமையில் நேற்று சிறப்பாய் இடம்பெற்றது!

கிழக்கு மாகாணத்தில் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக அர்ப்பணிப்புடன் சமூக சேவையாற்றி வரும் ‘கிழக்கு நட்புறவு ஒன்றியத்தின்’ (Eastern Friendship Organization – EFO) புதிய செயலகக் கட்டடத்திற்கான அடிக்கல் நடும் விழா நேற்று (31) ஞாயிற்றுக்கிழமை மிகச் சிறப்பாக நடைபெற்றது.

ஒன்றியத்தின் தவிசாளரும் பிரபல பொறியியலாளருமான எம்.எம். நஸீர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், இப்பிராந்தியத்தின் முன்னணி கல்விமான்கள், திணைக்களத் தலைவர்கள், ஓய்வுபெற்ற உயர் அதிகாரிகள், அரச அதிகாரிகள் மற்றும் தொழிலதிபர்கள் எனப் பல முக்கிய ஆளுமைகள் கலந்துகொண்டனர்.

“நட்புறவின் மூலம் மனிதநேயமிக்க சமத்துவமான சமுதாயத்தை உருவாக்குதல்” என்ற தூரநோக்கோடு 1995 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட EFO நிறுவனம், வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களின் கல்வி, கலாசாரம் மற்றும் பொருளாதார நிலைமைகளை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

இந்நிகழ்வில் உரையாற்றிய ஒன்றியத்தின் தவிசாளர் பொறியியலாளர் எம்.எம். நஸீர், “இன்றைய நாள் EFO வின் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாளாகும். எமது நீண்ட காலக் கனவு, உறுப்பினர்களின் கூட்டு முயற்சியால் இன்று நனவாகியுள்ளது. இந்தப் புதிய கட்டடம் வெறும் செங்கற்களால் ஆனது மட்டுமல்ல; இது எமது ஒற்றுமை, விடாமுயற்சி மற்றும் இலட்சியத்தின் சின்னமாகும். எதிர்கால சந்ததியினருக்கு நாம் விட்டுச்செல்லும் பலமான அடித்தளமான இக்கட்டடத்தை குறுகிய காலத்திற்குள் கட்டி முடிக்க அனைவரும் கைகோர்க்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார்.

தொடர்ந்து உரையாற்றிய முன்னாள் பிரதேச செயலாளரும் கிழக்கு நட்புறவு ஒன்றியத்தின் சிரேஷ்ட ஆலோசகருமான ஏ.எல்.எம். சலீம், “சுனாமிப் பேரழிவிற்குப் பிற்பட்ட காலப்பகுதியில் இருந்து EFO நிறுவனம் கல்விச் சேவைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. குறிப்பாக, உயர்தரப் பிரிவில் கற்கும் நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு புலமைப்பரிசில்களை வழங்கி வருகின்றோம்.

தற்போது அரசாங்கம் போதைப்பொருள் ஒழிப்பில் தீவிர கவனம் செலுத்தி வரும் நிலையில், போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை மீள் புனருத்தாபனம் செய்வதற்கான விசேட வேலைத்திட்ட மையம், பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான சுயதொழில் வழிகாட்டல் பிரிவு மற்றும் இளைஞர்களுக்கான தொழில் வழிகாட்டி மையங்கள் ஆகியன இந்தப் புதிய கட்டடத்திலேயே அமையவுள்ளன. இரு வருடங்களுக்குள் இத்திட்டத்தை நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளதால், கொடையாளர்களின் தாராளமான உதவிகளை எதிர்பார்க்கின்றோம்” எனக் குறிப்பிட்டார்.

தற்போது 54 அங்கத்தவர்களுடன் இயங்கி வரும் EFO ஒன்றியம், எதிர்வரும் காலங்களில் கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலிருந்தும் (மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை) வருடாந்தம் 10 முதல் 15 புதிய உறுப்பினர்களை இணைத்துக் கொள்ளத் தீர்மானித்துள்ளதுடன், இதில் இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share the Post: