• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • புத்தளத்தில் பெரும் சோகம்: சுற்றுலா சென்ற இடத்தில் கடல் நீரோட்டத்தில் சிக்கி மூன்று இளைஞர், யுவதிகள் பலி!

புத்தளத்தில் பெரும் சோகம்: சுற்றுலா சென்ற இடத்தில் கடல் நீரோட்டத்தில் சிக்கி மூன்று இளைஞர், யுவதிகள் பலி!

புத்தளம் – நுரைச்சோலை, தலுவா முகத்துவாரப் பகுதிக்கு (Daluwa Estuary) சுற்றுலா சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கடலில் ஏற்பட்ட கடுமையான நீரோட்டத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

நேற்று சனிக்கிழமை (06-06-2026) மாலை, விடுமுறையைக் கழிப்பதற்காக தலுவா முகத்துவாரப் பகுதிக்குச் சென்ற போதே இந்த எதிர்பாராத அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. அங்கு நிலவிய மோசமான காலநிலை மற்றும் கடுமையான கடல் இழுவை நீரோட்டம் காரணமாக, எதிர்பாராத விதமாக மூவரும் நீரில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, பிரதேசவாசிகள் மற்றும் நுரைச்சோலை பொலிஸார் இணைந்து நடத்திய தீவிர தேடுதலின் பின்னர் மூவரின் சடலங்களும் மீட்கப்பட்டு, தற்போது புத்தளம் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர்கள் அனைவரும் புத்தளம், தில்லையடி மற்றும் உமராபாத் பகுதிகளைச் சேர்ந்த ஒரே குடும்பத்தின் உறவினர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். 18 மற்றும் 19 வயதுடைய இரு இளம் பெண்களும், 24 வயதுடைய இளைஞர் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்தவர்களாவர். இந்தத் துயரச் சம்பவத்தினால் ஒட்டுமொத்த புத்தளம் பகுதியும் சோகத்தில் மூழ்கியுள்ளது.

பொதுமக்களுக்கான எச்சரிக்கை: தற்போது நாடு முழுவதும் நிலவி வரும் பலத்த காற்றுடன் கூடிய சீரற்ற காலநிலை காரணமாக, ஆறும் கடலும் சங்கமிக்கும் முகத்துவாரப் பகுதிகள் மற்றும் கடற்கரைகள் கொந்தளிப்பாகக் காணப்படுவதனால், பொதுமக்கள் நீர்நிலைகளில் இறங்குவதைத் தவிக்குமாறு பொலிஸாரும் உள்ளூர் அதிகாரிகளும் தொடர்ச்சியாக எச்சரித்து வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுரைச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share the Post:

Related Posts