இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்கள், இன்றைய தினம் (20) மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விசேட உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.
இதன்போது, மட்டக்களப்பு மாநகர மக்களுக்காகப் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள, அதிநவீன வசதிகளைக் கொண்ட மட்டக்களப்பு பொது நூலகக் கட்டடத்தை ஜனாதிபதி அவர்கள் நாடா வெட்டி, உத்தியோகபூர்வமாக மக்கள் பாவனைக்காகத் திறந்து வைத்தார்.
மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த பிரம்மாண்ட திறப்பு விழா நிகழ்வில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்திருந்தார்.
மட்டக்களப்பு மாநகர சபையின் பராமரிப்பின் கீழ் இயங்கவுள்ள இந்த பொது வாசிகசாலையானது, மத்திய அரசாங்கம் மற்றும் கிழக்கு மாகாண சபை ஆகியவற்றின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், மூன்று மாடிகளைக் கொண்ட நவீன கட்டடமாக மிக நேர்த்தியாகக் கட்டியெழுப்பப்பட்டுள்ளது.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்நிகழ்வில், கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்ணசேகர, அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சுனில் ஹந்துன்நெத்தி, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், ஞா.ஸ்ரீநேசன், வைத்தியர் இளையதம்பி ஸ்ரீநாத், எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட முக்கிய அரச உயரதிகாரிகள், அரசியல் பிரதிநிதிகள் மற்றும் பெருந்திரளான பொதுமக்களும் இதில் பங்கேற்றிருந்தனர்.
விழாவின் இறுதிப் பகுதியில், மட்டக்களப்பு மாநகர முதல்வரினால் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களுக்குப் பொன்னாடை போர்த்தப்பட்டு, விசேட நினைவுப்பரிசு வழங்கி உத்தியோகபூர்வமாகக் கௌரவிப்புச் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இந்தத் திறப்பு விழாவை நினைவுகூரும் வகையில் ஜனாதிபதியினால் புதிய வாசிகசாலை வளாகத்தில் பயன்தரும் மரக்கன்று ஒன்றும் நாட்டி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.










