ஹஸ்பர் ஏ எச்
மாற்றுத்திறனாளிகளை வேலைவாய்ப்பில் இணைத்து, அவர்களின் சமூக உள்ளடக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் சமூக சேவைகள் திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் “சிஹின –சிறீலங்கா” (Sihina Sri Lanka) திட்டம், வேலைவாய்ப்பு ஆதரவு அலகுகளை நிறுவி நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் சமூக சேவைகள் திணைக்களம் மற்றும் மனித வளங்கள் மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களம் ஆகியவற்றின் இணைந்த பங்களிப்புடன் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக, திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவில் உள்ள தெரிவு செய்யப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான குறித்த நிகழ்வு (23.09.2026) தம்பலகாமம்- பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.

தம்பலகாமம் பிரதேச செயலாளர் கே.சதிசேகரனின் தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் வளவாளராக தம்பலகாமம்- பிரதேச செயலக உளவளத்துனை உத்தியோகத்தர் திருமதி கொன்சலின் மாவலன் கலந்து கொண்டதுடன் திருகோணமலை மாவட்ட சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் த.பிரணவன், பிரதேச செயலக மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர் சாஜிதா பர்வீன்,சமூக சேவைகள் திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர் என பலரும் கலந்து கொண்டனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கு சாத்தியமான தொழில் வழங்குநர்களுடன் இணைப்பதன் மூலம் அவர்களின் பொருளாதார சுயாதீனத்தை மேம்படுத்துதல், உடல் மற்றும் உள நலனை வலுப்படுத்துதல், அனைவரையும் உள்ளடக்கிய ஆரோக்கியமான பணிச்சூழலை உருவாக்குதல் ஆகியவை இத்திட்டத்தின் பிரதான நோக்கங்களாகும்.
இதன் போது திருகோணமலை மாவட்ட சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் வள அபிவிருத்தி உத்தியோகத்தரும் தனது தொழில்சார் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதுடன், எதிர்கால வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொள்வதற்குத் தேவையான தகைமைகள், தயார்படுத்தல்கள் மற்றும் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் பங்கேற்பாளர்களுக்கு வழிகாட்டல்களை வழங்கியதுடன் அரசாங்கம் மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு நாடு தழுவிய ரீதியில் ஏற்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் அது தொடர்பான பயன்பாடுகள் தொடர்பிலும் பகிர்ந்து கொண்டார்.

நிகழ்வின்போது, பணியிடங்களில் மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் சவால்கள், அவற்றை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்காக அவர்கள் பயன்படுத்திய உத்திகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும்போது தொழில் வழங்குநர்கள் எதிர்நோக்கும் சிரமங்கள் தொடர்பில் பயனுள்ள கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
மேலும், பங்கேற்பாளர்களின் தன்னம்பிக்கை, குழு உணர்வு மற்றும் தனிப்பட்ட நலனை மேம்படுத்தும் வகையில் பல்வேறுபட்ட ஆளுமை விருத்தி ,ஊக்கமளிப்பு போன்ற விளையாட்டுக்கள் மற்றும் செயற்பாடுகளும் நடத்தப்பட்டன.
மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு வாய்ப்புகளை ஊக்குவிப்பதிலும், அவர்கள் சமூகத்தில் சுறுசுறுப்பான முறையில் பங்கேற்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவதிலும் இந்நிகழ்வு முக்கிய பங்காற்றியதுடன், பங்கேற்பாளர்களிடமிருந்து சாதகமான வரவேற்பையும் பெற்றுக்கொண்டது.





