• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • விபத்து அல்ல திட்டமிட்ட கொலை! மொறக்கொட்டாஞ்சேனை சம்பவத்தில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்!

விபத்து அல்ல திட்டமிட்ட கொலை! மொறக்கொட்டாஞ்சேனை சம்பவத்தில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்!

சந்திவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொறக்கொட்டாஞ்சேனை – களுவன்கேணி வீதியில் நேற்று (22) காலை இடம்பெற்ற மரணம், சாதாரண வாகன விபத்து போல் சோடிக்கப்பட்ட திட்டமிட்ட படுகொலை என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

நேற்று காலை குறித்த வீதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த நபர் ஒருவர் மீது, பின்னால் வந்த கெப் (Cab) ரக வாகனம் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் பலத்த காயமடைந்த துவிச்சக்கர வண்டி ஓட்டுனர் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவத்தில் பானகமுவ பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து தொடர்பில் உயிரிழந்தவரின் மனைவியும் பிள்ளையும் பொலிஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில், இந்த மரணத்தில் பலத்த சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து சந்திவெளி பொலிஸார் மேற்கொண்ட தீவிர மற்றும் நுணுக்கமான விசாரணைகளின் போது, உயிரிழந்த நபருக்கும் கெப் வாகனத்தின் ஓட்டுனருக்கும் இடையே நீண்டகாலமாக பழைய பகை (முரண்பாடு) இருந்து வந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இந்தத் தனிப்பட்ட குரோதம் காரணமாகவே, விபத்து போல காண்பித்து துவிச்சக்கர வண்டி மீது கெப் வாகனத்தை மோதி இக்கொலைச் சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது.

சாதாரண வீதி விபத்து என நினைக்கப்பட்ட சம்பவம், திட்டமிட்ட படுகொலையாக மாறியுள்ளமை அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் சந்திவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

Share the Post:

Related Posts