சிகரெட் மீதான வரியை 74 சதவீதத்திலிருந்து 66.8 சதவீதமாக அரசாங்கம் குறைத்துள்ளதன் காரணமாக, நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காகப் பயன்படுத்தியிருக்கக்கூடிய 17.3 பில்லியன் ரூபா வருமானத்தை அரசாங்கம் இழந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (10) நடைபெற்ற இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழான விதிகள் மற்றும் அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழான தீர்மானம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் மக்கள் எதிர்நோக்கும் அவலங்கள் குறித்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர், அரசாங்கத்தின் வரிக் கொள்கைகளை கடுமையாக விமர்சித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்:
“நாட்டின் தொழிற்சாலைகள் வீழ்ச்சியடைந்து, லட்சக்கணக்கான மக்கள் வேலைவாய்ப்புகளை இழந்துள்ளனர். வறுமை மட்டமானது 30 முதல் 40 சதவீதம் வரை அதிகரித்துள்ள ஒரு இக்கட்டான காலகட்டத்தில் நாடு நகர்ந்து கொண்டிருக்கிறது. மக்கள் படும் அவஸ்தைகள், அவர்களின் விரக்தி மற்றும் வாழ முடியாத நிலைமைகளைப் பற்றிப் பேசுவதற்குக் கூட தடை விதிக்கும் சூழலே இன்று நாட்டில் காணப்படுகிறது.”
பொதுமக்கள் மீது அரசாங்கம் வரிக்கு மேல் வரிகளை விதித்து சுமையேற்றி வரும் அதேவேளையில், சிகரெட் நிறுவனங்களுக்கு மறைமுகமாக வரியைக் குறைத்துச் சலுகை வழங்கியிருப்பது எவ்வகையிலும் நியாயமற்றது என அவர் சுட்டிக்காட்டினார்.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் (WHO) பரிந்துரைகளுக்கு முரணான வகையில் சிகரெட் வரி குறைக்கப்பட்டதால் ஏற்பட்டுள்ள 17.3 பில்லியன் ரூபா இழப்பானது, ஏழை மக்களுக்கு அத்தியாவசிய நிவாரணங்களை வழங்கப் பயன்பட்டிருக்கலாம் என அவர் ஆதங்கம் வெளியிட்டார்.
எனவே, அரசாங்கம் இனியாவது சாமானிய மக்கள் குறித்துச் சிந்தித்து, சிகரெட் மீதான வரியை உடனடியாக அதிகரிக்க வேண்டும் எனவும், அதன் மூலம் கிடைக்கும் கூடுதல் வருவாயைக் கொண்டு நலிவடைந்த மக்களுக்கு நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இம்மாமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.




