• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • திருகோணமலை, கிண்ணியா பகுதியில் 3.2 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் பாடசாலை ஆசிரியர் ஒருவர் இன்று (12) காலை கிண்ணியா போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருகோணமலை, கிண்ணியா பகுதியில் 3.2 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் பாடசாலை ஆசிரியர் ஒருவர் இன்று (12) காலை கிண்ணியா போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிண்ணியா குறிஞ்சாக்கேணி அரபா ஆண்கள் மகா வித்தியாலயத்தில் ஆசிரியராகப் பணியாற்றி வரும் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். காக்காமுனையைப் பிறப்பிடமாகவும், முனைச்சேனைப் பிரதேசத்தை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்டவரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவராவார்.

நடுத்தீவில் சிக்கிய ஆசிரியர்: கிண்ணியா, நடுத்தீவு ஆயுர்வேத வைத்தியசாலைக்கு முன்பாக சிவில் பாதுகாப்பு குழுவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் இன்று காலை திடீர் சோதனை நடவடிக்கையொன்றை முன்னெடுத்திருந்தனர். இதன்போதே குறித்த ஆசிரியர் போதைப்பொருளுடன் கைகலப்புமாக சிக்கியுள்ளார். அவரிடமிருந்து 3.2 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

நீண்டகாலமாக வியாபாரம்: கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது, இந்த ஆசிரியர் நீண்டகாலமாக இரகசியமான முறையில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார் என்ற அதிர்ச்சித் தகவல் அம்பலமாகியுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கிண்ணியா போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தீவிர ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share the Post: