கல்முனை மாநகர சபைக்குட்பட்ட முக்கிய வர்த்தக மையமான பொதுச் சந்தைத் தொகுதியை முழுமையாக தூய்மைப்படுத்தும் விசேட வேலைத்திட்டமொன்று நேற்று (11) வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி அவர்களின் நேரடி அறிவுறுத்தலுக்கு அமைவாக இவ்வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டது.
பொதுச் சந்தையில் நீண்டகாலமாக நிலவி வரும் பல்வேறு குறைபாடுகள் மற்றும் சுகாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாநகர சபையின் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களின் நேரடி வழிகாட்டலில், சந்தையின் உள்பகுதி, வெளிப்பகுதி மற்றும் அதனைச் சூழவுள்ள இடங்களில் தேங்கிக் கிடந்த திண்மக் கழிவுகள் யாவும் ஊழியர்களால் முழுமையாக அகற்றப்பட்டன.
குறிப்பாக, சந்தைத் தொகுதியில் உள்ள வடிகான்களில் கழிவுநீர் தடையின்றிச் செல்வதை உறுதிப்படுத்தும் வகையில் தேங்கிக் கிடந்த கழிவுகள் யாவும் அகற்றப்பட்டு சீர்செய்யப்பட்டுள்ளன. அத்துடன், மூடிகள் உடைந்து ஆபத்தான நிலையில் காணப்பட்ட வடிகான் பகுதிகளுக்கு உடனடியாக புதிய மூடிகளை இடுவதற்கும் இதன்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாநகர சபையினால் நாளாந்தம் முன்னெடுக்கப்படும் வழக்கமான தூய்மையாக்கல் பணிகளுக்கு மேலதிகமாகவே, இந்த விசேட தூய்மையாக்கல் பணி முடுக்கிவிடப்பட்டதாக மாநகர சபை வட்டாரங்கள் தெரிவித்தன.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி, “சுத்தம் செய்யப்பட்டுள்ள பொதுச் சந்தைத் தொகுதியின் தூய்மையையும் சுகாதாரத்தையும் தொடர்ந்தும் பேணிப் பாதுகாப்பதற்கு வர்த்தகர்களும், அங்கு வரும் நுகர்வோரும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார். மேலும், பொதுப் போக்குவரத்துக்கும், பாதசாரிகளுக்கும் இடையூறு ஏற்படாத வகையில் வர்த்தக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
சந்தைத் தொகுதியின் சுகாதாரம் மற்றும் ஒழுங்குமுறைகளைத் தொடர்ச்சியாகக் கண்காணிக்குமாறு சந்தை மேற்பார்வையாளர் மற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களுக்கு ஆணையாளர் பணிப்புரை விடுத்துள்ளார். அத்துடன், சந்தையில் நிலவும் ஏனைய உட்கட்டமைப்பு குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் வரும் நாட்களில் மாநகர சபையினால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.








