கத்தார் நாட்டின் முன்னாள் தலைவரும், நவீன கத்தாரின் சிற்பி எனப் போற்றப்படுபவருமான தந்தை அமீர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி (Sheikh Hamad bin Khalifa Al Thani) அவர்களின் மறைவுக்கு இலங்கை நாட்டின் சார்பாக இறுதி மரியாதை செலுத்துவதற்காக, கௌரவ பிரதமர் அவர்கள் கத்தார் நோக்கி உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
ஜூலை 14ஆம் திகதி மாலை இலங்கையிலிருந்து கத்தார் நோக்கிப் புறப்பட்டுச் சென்ற பிரதமர், கத்தாரைச் சென்றடைந்துள்ளார்.
கத்தாரை உலக அரங்கில் பெரும் பொருளாதார சக்தியாகவும், நவீனமயமாக்கப்பட்ட நாடாகவும் மாற்றியமைத்த பெருமைக்குரிய தந்தை அமீர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி அவர்கள், கடந்த ஞாயிற்றுக்கிழமை (12.07.2026) தனது 74 ஆவது வயதில் காலமானார். அவரது மறைவையொட்டி கத்தாரில் தேசிய துக்க தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
இவ்விஜயத்தின் போது கௌரவ பிரதமர் அவர்கள்:
- இலங்கை அரசாங்கம் மற்றும் இலங்கை மக்கள் சார்பாக தங்களது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் கத்தார் அரச குடும்பத்திற்கும் அந்நாட்டு மக்களுக்கும் நேரில் தெரிவிக்கவுள்ளார்.
- கத்தார் நாட்டின் தற்போதைய அமீர் மற்றும் உயர்மட்டத் தலைவர்களைச் சந்தித்து இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவையும் இருதரப்பு ஒத்துழைப்புகளையும் மீள உறுதிப்படுத்தவுள்ளார்.
இலங்கைக்கும் கத்தார் நாட்டிற்கும் இடையே நிலவிவரும் நெருக்கமான மற்றும் சினேகபூர்வமான இருதரப்பு உறவுகளின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் பிரதமரின் இவ்விஜயம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




