சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் நாளை 04ஆம் திகதி பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையில் திறந்து வைக்கப்பட உள்ளதாக மருத்துவ பீடத்தின் பீடாதிபதி சிரேஷ்ட பேராசிரியர் நிர்மலி விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.இந்நிகழ்வில் சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன மற்றும் சவூதி அபிவிருத்தி நிதியத்தின் பிரதித் தலைவர் பொறியியலாளர் பைசல் எம். அல்கஹ்தானி (Eng. Faisal M. Alkahtani) ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.இலங்கை மற்றும் சவூதி அரேபிய அரசாங்கங்களின் கூட்டு நிதி உதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த மருத்துவ பீடம், இரத்தினபுரி புதிய நகரை அண்மித்து அமைந்துள்ளது.
20 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட காணியில் அமைந்துள்ள இந்த மருத்துவ பீடத்திற்குள் இந்த வருடத்திற்காக 162 மருத்துவ மாணவர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.தற்போது இங்கு சுமார் 750 மருத்துவ மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.இந்த பீடத்தை நிர்மாணிப்பதற்காக இலங்கை அரசாங்கம் வழங்கியுள்ள நிதி 1096 மில்லியன் ரூபாவாகும் சவூதி அரசாங்கம் இதற்காக 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது.இது ஒரே நேரத்தில் 500 மாணவர்களுக்கு விடுதி வசதி வழங்கக்கூடிய ஒரு விடுதியையும், ஒரே நேரத்தில் 1060 பேர் அமரக்கூடிய ஒரு மண்டபத்தையும் (Auditorium) கொண்டுள்ளது.அத்துடன், இது 250 ஆசனங்களைக் கொண்ட இரண்டு விரிவுரை மண்டபங்களையும், 200 மாணவர்கள் அமரக்கூடிய ஒரு விரிவுரை மண்டபத்தையும், 160 மாணவர்கள் அமரக்கூடிய மூன்று விரிவுரை அறைகளையும் கொண்டுள்ளது.
ஊழியர்களுக்கான விடுதிகள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகளையும் இந்த வளாகம் கொண்டுள்ளது.இரத்தினபுரி போதனா வைத்தியசாலையை அண்மித்து, இந்த மருத்துவ பீடத்திற்காக ஒன்பது மாடிகளைக் கொண்ட முழுமையான பேராசிரியர்கள் பிரிவொன்றும் (Professor Unit) நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.
அது 418 படுக்கைகள் மற்றும் முழுமையான விஞ்ஞான கூடங்கள், ஆய்வகங்கள் உள்ளிட்ட பிற வசதிகளைக் கொண்டுள்ளது.இது குறித்து மேலும் கருத்துத் தொடர்ந்து கருத்து தெரிவித்த சிரேஷ்ட பேராசிரியர் நிர்மலி விக்ரமரத்ன,2005 ஆம் ஆண்டில், சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் திட்டத்தில் இந்த மருத்துவ பீடம் சேர்க்கப்பட்டது.2019 ஆம் ஆண்டில் அரசாங்கத்தால் வர்த்தமானி (Gazette) மூலம் அறிவிக்கப்பட்டு, அதே ஆண்டில் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் 70 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்டது.அது குருவிட்டவில் அமைந்துள்ள அரசாங்க கணக்காய்வு திணைக்களத்தின் கட்டிடத் தொகுதியொன்றில் ஆரம்பிக்கப்பட்டது.இதற்கு மேலதிகமாக, இரத்தினபுரியில் அமைந்துள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்குச் சொந்தமான கட்டிடத் தொகுதியிலும், சப்ரகமுவ மாகாண சபையின் சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகத்திலும் விரிவுரைகள் நடாத்தப்பட்டன என்றும் மருத்துவ பீடத்தின் பீடாதிபதி சிரேஷ்ட பேராசிரியர் நிர்மலி விக்ரமரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.




