• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • மூதூரில் வீதிப் புனரமைப்பின் போது பரபரப்பு: நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த 2 கைக்குண்டுகள் மீட்பு!

மூதூரில் வீதிப் புனரமைப்பின் போது பரபரப்பு: நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த 2 கைக்குண்டுகள் மீட்பு!

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெய்தல் நகர் மையவாடி வீதியில், நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டு கைக்குண்டுகள் வியாழக்கிழமை (04) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நெய்தல் நகர் பகுதியிலுள்ள குறித்த வீதியில் தற்போது புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் போது, வீதியைத் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்களுக்கு, போத்தல் ஒன்றில் அடைக்கப்பட்டு நிலத்தின்கீழ் புதைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த இரண்டு கைக்குண்டுகளும் தென்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து, அதிர்ச்சியடைந்த வீதிப் புனரமைப்பு ஊழியர்கள் உடனடியாக இது குறித்து மூதூர் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், குண்டுகள் கண்டெடுக்கப்பட்ட பகுதியைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததுடன் பாதுகாப்பையும் பலப்படுத்தியுள்ளனர்.

நீதிமன்ற அனுமதியைப் பெற்றுக்கொண்டதன் பின்னர், விசேட அதிரடிப்படையினரின் (STF) உதவியுடன் அந்த கைக்குண்டுகளைப் பாதுகாப்பாக மீட்பதற்கும், அதனைத் தொடர்ந்து அவற்றைச் செயலிழக்கச் செய்வதற்கும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மூதூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

Share the Post: