நுவரெலியா மாவட்டம், ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியின் டிக்கோயா, வோர்லி தோட்டப் பகுதியில் இன்றைய தினம் (08) காலை பாரிய மண்மேடு ஒன்று வீதியில் சரிந்து வீழ்ந்தமையினால் போக்குவரத்து பல மணிநேரம் முழுமையாகத் தடைப்பட்டிருந்தது.
தற்போது வீதி அபிவிருத்தி அதிகார சபையினரால் மண்மேட்டை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு, ஒருவழிப் போக்குவரத்து மாத்திரம் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், படிப்படியாக போக்குவரத்து வழமைக்குத் திரும்பி வருகிறது.
மத்திய மாகாணத்திலும் மலையகத்தின் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாகப் பெய்து வரும் கடும் மழையுடனான சீரற்ற காலநிலையினாலேயே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அவசர எச்சரிக்கை:
மத்திய மாகாணத்தில் பிற்பகல் வேளைகளில் பெய்து வரும் விடாத அடைமழை காரணமாக, ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியின் பல இடங்களில் மண்சரிவு ஏற்படுவதற்கான அறிகுறியாக அபாயகரமான வெடிப்புகள் தோன்றியுள்ளன.
இதன் காரணமாக, இவ்வீதியைப் பயன்படுத்தும் வாகனச் சாரதிகள் மற்றும் பாதசாரிகள் மிகவும் அவதானத்துடனும் விழிப்புடனும் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அதிகாரிகளும், நோர்வூட் நிர்வாகப் பொறியாளர் அலுவலக அதிகாரிகளும் அவசர அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.




