2003 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க விசேட வகைப் பிணக்குகள் மத்தியஸ்தச் சட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பயிலுநர்களுக்கான 6 நாள் விசேட பயிற்சி நெறி திங்கட்கிழமை(26.10.2026) மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட உதவி அரசாங்க அதிபர் ஜீ.பிரணவன் அவர்களின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களது தலைமையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட காணி விசேட மத்தியஸ்த சபையின் ஏற்பாட்டில் இடம்பெறும் இப்பயிற்சித் திட்டம், 31 ஆம் திகதி வரை தினமும் காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறுகின்றது.
காணி உரிமை மற்றும் உடமை தொடர்பான பிணக்குகளைக் கையாள்வதற்கான நடைமுறைகள், மத்தியஸ்த நுட்பங்கள், முரண்பாட்டுப் பகுப்பாய்வு, சட்ட ஏற்பாடுகள் மற்றும் மத்தியஸ்தர்கள் அறிந்திருக்க வேண்டிய விசேட தந்திரோபாயங்கள் குறித்து மத்தியஸ்த பயிற்சி வளவாளர்களான எம்.ஐ.எம். ஆசாத், மற்றும் எஸ்.விமலராஜா ஆரியோர் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
காணி மத்தியஸ்தராகத் தகைமை பெறுவதற்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ள இப்பயிலுநர்கள் 6 நாட்களிலும் முழுமையாகக் கலந்து கொள்வதுடன், இறுதி நாளில் நடாத்தப்படும் பரீட்சையிலும் தோற்றுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் ஓய்வு நிலை கிழக்கு மாகாண காணி ஆணையாளரும் மட்டக்களப்பு மாவட்ட மத்தியஸ்த சபையின் காணி விசேட தவிசாளருமான கே.குருநாதன், மற்றும் தெரிவு செய்யப்பட்ட பயிலுனர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.




