புத்த பெருமானின் உன்னத ஆசீர்வாதத்தோடும், ஆன்மீக ஒளியோடும் இந்த ஆண்டிற்கான (2026) புனித வெசக் திருநாளைக் கொண்டாடுவதற்கு முழு நாடும் தயாராகி வருகின்றது. நாட்டின் மிக அழகிய, வரலாற்றுச் சிறப்புமிக்க புண்ணிய பூமிகளை மையப்படுத்தி இம்முறை வெசக் வழிபாடுகளும் அரச வெசக் விழாக்களும் மிக விமர்சையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அமைச்சரவையின் தீர்மானத்திற்கு அமைய, மே மாதம் 27ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 02ஆம் திகதி வரையிலான காலப்பகுதி ‘தேசிய வெசக் வாரமாக’ பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வாரத்தில் நாடளாவிய ரீதியில் உள்ள பௌத்த விகாரைகள் மற்றும் வரலாற்றுப் புண்ணிய ஸ்தலங்களில் விசேட மத வழிபாடுகள், தான தர்மங்கள் மற்றும் போதி பூசைகள் என்பன இடம்பெறவுள்ளன.
மகா சங்கத்தினரின் ஆலோசனையின் பேரில், மே மாதம் 30ஆம் திகதி சனிக்கிழமை புனித வெசக் பௌர்ணமி தினமாக உத்தியோகபூர்வமாக அனுஷ்டிக்கப்படவுள்ளதுடன், அதற்கு மறுநாளான மே 31ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அரசாங்க விடுமுறை தினமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
“அபித்தரேத கல்யாண” (நன்மைகளுக்காக ஒன்றிணைவோம்) எனும் உன்னத கருப்பொருளின் கீழ், இம்முறை மாத்தறை மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மிதெல்லவல ரஜமஹா விகாரையை (Midellawala Temple) பிரதான மையமாகக் கொண்டு ‘தக்ஷிண பிரபா’ தேசிய வெசக் விழா ஆரம்பமாகவுள்ளது.
புண்ணிய பூமிகளான அனுராதபுரம், பொலன்னறுவை, கண்டி ஸ்ரீ தலதா மாளிகை மற்றும் நாட்டின் நாலாபாகங்களிலும் உள்ள வரலாற்று விகாரைகள் அனைத்தும் வெசக் கூடுகள், தோரணங்கள் மற்றும் பக்திப் பாடல்களுடன் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, பக்தி மயமாகக் காட்சியளிக்கத் தொடங்கியுள்ளன.
அமைதி, கருணை மற்றும் ஆன்மீக விழிப்புணர்வை உலகிற்கு உணர்த்தும் இந்த உன்னத வெசக் வாரத்தில், நாட்டு மக்கள் அனைவரும் ஆன்மீகக் கொள்கைகளை பின்பற்றி, நற்பணிகளில் ஈடுபடுமாறு பௌத்த மத விவகார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.






