உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, அக்கரைப்பற்று மாநகர சபையின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு நிகழ்வுகள் மிகச் சிறப்பான முறையிலும் உற்சாகமாகவும் அண்மையில் நடாத்தப்பட்டன.
சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை பொதுமக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிவழ்வுகளில், அக்கரைப்பற்று வலயத்திற்குட்பட்ட பல்வேறு பாடசாலைகளைச் சேர்ந்த பெருமளவான மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது, மாணவர்களின் பங்கேற்புடன் கூடிய விழிப்புணர்வு ஊர்வலங்களும், சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் வீதி நாடகங்களும் நகரின் முக்கிய வீதிகள் வழியாக அரங்கேற்றப்பட்டன.
சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வை இம்முறை மிக நேர்த்தியாகவும் பிரம்மாண்டமாகவும் திட்டமிட்டு முன்னெடுத்த அக்கரைப்பற்று மாநகர சபைக்கு பிரதேச மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், இந்த விழிப்புணர்வுப் பணிகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கிய வலயக் கல்வி அலுவலகம், பிரதேச செயலகம், சர்வோதயம் மற்றும் யுனிசெப் (UNICEF) ஆகிய நிறுவனங்களுக்கும் இதன்போது பிரத்தியேகமாக நன்றிகள் கூறப்பட்டன.
இவ்விழிப்புணர்வுப் பேரணியின் தொடர்ச்சியாக, அக்கரைப்பற்று அதாஉல்லாஹ் அரங்கில் விசேட கலை, கலாசார நிகழ்ச்சிகளும் அரங்கேறின. இந்நிகழ்வில் தேசிய காங்கிரஸின் தலைவரும் அக்கரைப்பற்று மாநகர சபை முதல்வருமான ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.








