• Home
  • உள்ளூர் செய்திகள்
  • கடும் வறட்சியால் 72,000 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு: நீர் தட்டுப்பாட்டால் விவசாயமும் ஸ்தம்பிதம்!

கடும் வறட்சியால் 72,000 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு: நீர் தட்டுப்பாட்டால் விவசாயமும் ஸ்தம்பிதம்!

நாட்டில் தற்போது நிலவி வரும் கடும் வறட்சியான வானிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், விவசாய நடவடிக்கைகளும் பெரும் அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளன.

அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள அண்மைக்கால அறிக்கையின்படி, நாட்டின் பல பகுதிகளில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டும் 23,048 குடும்பங்களைச் சேர்ந்த 72,153 பேருக்குத் தாங்கி ஊர்திகள் (Bowser) மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டுள்ளது.

கடும் வெப்பம் காரணமாக அனுராதபுரம் – நாச்சதூவ குளம் முழுமையாக வற்றிப்போயுள்ளது. இதன் காரணமாக பண்டிகெடுவ பகுதியில் பயிரிடப்பட்டிருந்த மிளகாய் பயிர்களும், திரப்பனை – மாவத்தவெவ பகுதியில் தர்பூசணி மற்றும் பூசணிப் பயிர்களும் நீரின்றி காய்ந்து கருகும் நிலையை அடைந்துள்ளன.

இதேவேளை, பொலன்னறுவை – ஹிங்குராக்கொட, ரத்மலே பகுதியில் பயிர்கள் அழிவடைந்துள்ளதால் விவசாயிகள் நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர். அப்பகுதியிலுள்ள கோனமலயாவ குளமும் வற்றி வருவதால் வனவிலங்குகளும் குடிநீரின்றி தவித்து வருகின்றன.

மாத்தளை – வில்கமுவ, லெஹெடீயங்கல கிராமத்தில் வாழும் சுமார் 500 குடும்பங்கள் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ளதுடன், தமக்கு உடனடியாகச் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டமொன்றை அமைத்துத் தருமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் நீர்ப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு வழங்கப்படும் எனத் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. தற்போது அங்கு சில பகுதிகளில் தினமும் 4 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. அத்துடன், மொனராகலை மாவட்டத்தின் பிபில மற்றும் மெதகம பகுதிகளுக்குப் போத்தல்கள் மற்றும் நீர் தாங்கி ஊர்திகள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

மேல், வட மத்திய மாகாணங்களிலும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களிலும் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலையானது ‘எச்சரிக்கை’ மட்டத்தில் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

Share the Post: