கையால்  மணலை அகற்றி தேங்கிய மழை நீரை கடலுக்குள் திருப்பிய இளைஞர்கள்

Green field Condominium Management Committee – சமூகப் பொறுப்புடன் ஒரு முன்மாதிரி நடவடிக்கை

[அம்பாறை நிருபர் – பாறுக் ஷிஹான்]

அம்பாறை மாவட்டம் கல்முனை  பகுதியில் இன்று பிற்பகல் சுமார் 3.00 மணியளவில் பெய்த கடும் அடைமழை காரணமாக, கடற்கரைப் பகுதியில் பெருமளவிலான மழைநீர் தேங்கி கடலை நோக்கி வெளியேற முடியாமல் ஊருக்குள் பாயும் நிலை ஏற்பட்டது.

இச்சூழ்நிலையைக் கண்ட ‘Green Field Condominium Management Committee’ அமைப்பைச் சேர்ந்த ஏ.பி.எம். தாரிக் ஆதம் பாவா , முஹம்மத் அஸ்லம்  உள்ளிட்ட நால்வர் உடனடிச் சமூகப் பொறுப்புடன் செயற்பட முன்வந்தனர்.

எவ்வித மண்வெட்டிகளோ அல்லது தொழில்நுட்ப உபகரணங்களோ இல்லாத நிலையிலும், அவர்கள் தங்கள் கைகளாலேயே மணலைத் தோண்டி அகற்றி, நீர் கடலை நோக்கி வடிந்து செல்வதற்கான தற்காலிகப் பாதையை உருவாக்கினர். அவர்களின் இத்தொடர் முயற்சியின் பலனாகத் தேங்கியிருந்த மழைநீர் முழுமையாகக் கடலை நோக்கி வழிந்தோடி ஊருக்குள் நீர் புகும் அபாயம் தவிர்க்கப்பட்டது.

“ஒரு நல்ல காரியத்தைச் செய்வதற்குப் பெரிய அதிகாரமோ அல்லது அதிகமான உபகரணங்களோ தேவையில்லை; நல்ல மனமும், சமூகத்தின் மீதான அக்கறையும், செயற்படத் தயாரான மனப்பான்மையுமே போதுமானது. மழை பெய்யும்போது குறைகளை மட்டும் கூறிக் கொண்டிருக்காமல், நம்மால் முடிந்த உதவியைச் சமூகத்திற்குச் செய்வதே உண்மையான சமூகப் பொறுப்பாகும்” என இச்சம்பவம் குறித்து அவர்கள் தெரிவித்தனர்.

சுயநலமின்றி உடனடியாகச் செயற்பட்டு சாமானிய மக்களுக்கும் ஊருக்கும் முன்மாதிரியாகத் திகழ்ந்த இக்குழுவினரின் நற்செயலைப் பிரதேச பொதுமக்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.

Share the Post:

Related Posts

உள்ளூர் செய்திகள்

மட்டக்களப்பு  கடற்றொழில் திணைக்கள ஒரு சில பரிசோதகர்களின் அனுசரனையுடன் சட்டவிரோத சுருக்குவலை பாவித்து மீன் பிடிக்கின்றனர்– மட்டு ஊழல் மோசடி மற்றும் போதை பொருளுக்கு எதிரான அமைப்பு குற்றச்சாட்டு–