நாட்டின் சில பகுதிகளில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் எச்சரித்துள்ளது.
இதன்படி, மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும். அநுராதபுரம், மாத்தளை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் சில இடங்களில் சிறிய அளவிலான மழை பதிவாக வாய்ப்புள்ளது.
அதேவேளை, அம்பாறை, மொனராகலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறட்சியான வானிலையே நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பலத்த காற்று மற்றும் மின்னல் எச்சரிக்கை:
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை, மொனராகலை, அம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாகப் பலத்த காற்றும், மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும் என்பதால், பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.




