இந்த ஆண்டு தீபாவளித் திருநாளில் இருள் நீங்கி ஒளி பிறப்பதோடு, மக்களின் வாழ்விலும் நம்பிக்கையும் மகிழ்ச்சியும் மலரட்டும் எனக் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தனது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள தீபாவளி வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இருள் நீங்கி ஒளி பிறப்பதையும், தீமையை வென்று நன்மை நிலைபெறுவதையும், அறியாமையை அகற்றி அறிவும் ஞானமும் மேலோங்குவதையும் குறிக்கும் உன்னதமான திருநாளாகத் தீபாவளி கொண்டாடப்படுகிறது. மனித வாழ்வில் நம்பிக்கை, அன்பு, அமைதி, சகோதரத்துவம் மற்றும் மனிதநேயம் ஆகிய உயரிய பண்புகளை நினைவூட்டும் இத்திருநாள், ஒவ்வொருவரின் வாழ்விலும் புதிய எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கைகளையும் விதைக்கின்றது.
இலங்கை பல்வேறு இனங்கள், மதங்கள், மொழிகள் மற்றும் கலாசாரங்களைச் சார்ந்த மக்கள் ஒன்றிணைந்து வாழும் நாடாகும். எமது நாட்டின் பன்முகத்தன்மையே எமது பலமாகும். ஒவ்வொரு மதத்தினதும் கலாசார விழுமியங்களையும் மரபுகளையும் பரஸ்பரம் மதித்து, புரிந்துணர்வுடனும் சகோதரத்துவத்துடனும் வாழ்வதன் ஊடாகவே அமைதியானதும் வளமானதுமான சமூகத்தையும் நாட்டையும் கட்டியெழுப்ப முடியும்.
தீபாவளி உணர்த்தும் ஒளி என்பது வீடுகளிலும் வீதிகளிலும் ஏற்றப்படும் தீபங்களுடன் மட்டும் நின்றுவிடக் கூடாது. எமது சமூகத்தில் நிலவும் வறுமை, ஏற்றத்தாழ்வு, பாகுபாடு மற்றும் அநீதிகள் போன்ற இருள்களையும் அகற்றுவதற்கான சமூக மாற்றத்தின் ஒளியாகவும் அது அமைய வேண்டும். ஒவ்வொரு குடும்பத்தினதும் வாழ்வில் பொருளாதாரப் பாதுகாப்பு, கௌரவமான வாழ்க்கை, சமத்துவம் மற்றும் மகிழ்ச்சி உறுதிப்படுத்தப்படும்போதே பண்டிகைகளின் உண்மையான மகிழ்ச்சியை அனைவரும் அனுபவிக்க முடியும்.
இலங்கை இன்று புதிய சமூக மற்றும் பொருளாதார மாற்றங்களை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கின்றது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ என்ற தேசிய தொலைநோக்குப் பார்வையானது, பொருளாதார ரீதியில் வலுவான நாட்டைக் கட்டியெழுப்புவதுடன், ஒவ்வொரு குடிமகனும் கௌரவத்துடனும் பாதுகாப்புடனும் சமத்துவத்துடனும் மகிழ்ச்சியாக வாழக்கூடிய சமூகத்தை உருவாக்குவதையும் இலக்காகக் கொண்டுள்ளது.
வறுமையை ஒழித்தல், ஊழல் மற்றும் மோசடிகளற்ற நேர்மையான நிர்வாகத்தை உறுதிப்படுத்துதல், அனைவருக்கும் சமமான உரிமைகளையும் வாய்ப்புகளையும் ஏற்படுத்துதல், இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாத்தல் மற்றும் போதைப்பொருள் அச்சுறுத்தலிலிருந்து சமூகத்தை விடுவித்தல் போன்ற இலக்குகளை அடைவதற்கு அரசாங்கம் முன்னெடுக்கும் மாற்றங்களுக்குப் பொதுமக்களின் ஒத்துழைப்பும் பங்களிப்பும் மிகவும் அவசியமாகும். குறிப்பாக, ஆரோக்கியமான, போதைப்பொருள் அற்ற சமூகத்தைக் கட்டியெழுப்புவதுடன், கல்வி, விளையாட்டு மற்றும் ஆக்கபூர்வமான செயற்பாடுகளின் ஊடாக இளைய தலைமுறையினரின் திறமைகளையும் ஆற்றல்களையும் மேம்படுத்துவது வளமான எதிர்காலத்திற்கான அடித்தளமாகும்.
நாட்டை மீளக் கட்டியெழுப்பும் எமது பயணத்தில் இன, மத, மொழி வேறுபாடுகளைக் கடந்து அனைத்து மக்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது காலத்தின் அவசியமாகும். பரஸ்பர நம்பிக்கை, ஒற்றுமை, அர்ப்பணிப்பு மற்றும் கூட்டு முயற்சியின் ஊடாகவே அனைவருக்கும் சமமான உரிமைகளும் வாய்ப்புகளும் கொண்ட வளமான இலங்கையை உருவாக்க முடியும்.
இந்தத் தீபாவளித் திருநாள் ஏற்றும் ஒளியானது ஒவ்வொரு இல்லத்திலும் மகிழ்ச்சியையும் மனநிறைவையும் ஏற்படுத்துவதோடு, எமது சமூகத்தில் நிலவும் இருள்களை அகற்றி, புதிய நம்பிக்கைகளையும் மாற்றங்களையும் உருவாக்கும் ஒளியாகவும் அமையட்டும். ‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ என்ற எமது தேசிய இலட்சியத்தை நனவாக்கும் பயணத்தில் அனைத்து மக்களினதும் ஒத்துழைப்பும் பங்களிப்பும் மேலும் வலுச்சேர்க்கட்டும்.
இலங்கையிலும் உலகின் பல்வேறு நாடுகளிலும் வாழும் இந்து மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.




