சர்வதேச நிதிச் சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக, தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் இன்று சரிவைச் சந்தித்துள்ளன. அமெரிக்க டொலரின் பலம் மற்றும் உலகளாவிய பொருளாதாரக் காரணிகளால் முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள தாக்கமே இந்த விலை வீழ்ச்சிக்குக் காரணம் என சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கமைய, உலகச் சந்தையில் இன்று ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை $4,137 அமெரிக்க டொலராகப் பதிவாகி வீழ்ச்சியடைந்துள்ளது. அத்துடன், தங்கத்தைப் போன்றே வெள்ளி விலையிலும் சரிவு ஏற்பட்டுள்ளதோடு, ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை $63 அமெரிக்க டொலராக விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள இந்தத் தொடர் விலை வீழ்ச்சியின் காரணமாக, இலங்கையின் உள்நாட்டுத் தங்கச் சந்தையிலும் இன்று தங்கத்தின் விலை கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட உள்நாட்டுத் தங்க விலை, இந்த சர்வதேச மாற்றத்தினால் பொதுமக்களுக்கும் நகைக் கொள்வனவாளர்களுக்கும் ஓரளவு சாதகமாக அமையும் என கொழும்பு செட்டித்தெரு வர்த்தக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.




