• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • மாகாண மட்ட கராத்தே போட்டியில் தங்கம் வென்று கிளிநொச்சி இந்துக் கல்லூரி மாணவி ஷாலினி சாதனை!

மாகாண மட்ட கராத்தே போட்டியில் தங்கம் வென்று கிளிநொச்சி இந்துக் கல்லூரி மாணவி ஷாலினி சாதனை!

வட மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான கராத்தே போட்டியில் கிளிநொச்சி இந்துக் கல்லூரி மாணவி K. ஷாலினி முதலிடம் பெற்று, தங்கப் பதக்கத்தை சுவீகரித்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

இலங்கை கல்வி அமைச்சின் அனுசரணையுடன் அண்மையில் நடாத்தப்பட்ட வட மாகாண மட்ட கராத்தே போட்டியின் 20 வயதிற்குட்பட்ட மகளிர் பிரிவிலேயே (Under-20 Girls) இவர் இச்சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

இப்போட்டியின் கராத்தே கமிட்டே (Kumite – +50 கிலோகிராம்) பிரிவில் களமிறங்கிய மாணவி K. ஷாலினி, தனது அதிரடியான மற்றும் நேர்த்தியான திறமைகளை வெளிப்படுத்தி, எதிராளிகளை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கிக் கொண்டார்.

குவியும் பாராட்டுக்கள்: மாகாண மட்டத்தில் தங்கப் பதக்கம் வென்று, தனது பாடசாலைக்கும் கிளிநொச்சி மாவட்டத்திற்கும் பெரும் பெருமையைத் தேடித்தந்துள்ள மாணவி K. ஷாலினிக்கு தற்போது பலதரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில், மாகாண மட்டத்தில் தங்கம் வென்ற சாதனை மாணவி K. ஷாலினிக்கும், அவரை மிகச் சிறந்த முறையில் வழிநடத்தி, வெற்றிப் பாதைக்கு வித்திட்ட கராத்தே பயிற்றுவிப்பாளர் சென்செய் தர்ஷன் அவர்களுக்கும் கிளிநொச்சி இந்துக் கல்லூரிச் சமூகம் (அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பழைய மாணவர்கள்) தமது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.

மாகாண மட்டப் போட்டிகளில் அசத்திய இந்த இளம் வீராங்கனை, அடுத்து நடைபெறவுள்ள தேசிய மட்டப் போட்டிகளிலும் (National Level) பங்குபற்றி, பல வெற்றிகளைப் பெற்று பாடசாலைக்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என விளையாட்டு ரசிகர்களும், பிரதேச மக்களும் வாழ்த்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

Share the Post: