கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகரை நோக்கிப் புறப்பட்ட பயணிகள் விமானம் ஒன்று, பறவையுடன் மோதியதைத் தொடர்ந்து வான்வெளியில் பல மணிநேரம் சுற்றித் திரிந்து, பின்னர் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டுள்ளது.
துருக்கி ஏர்லைன்ஸுக்குச் சொந்தமான TK-731 என்ற இந்த விமானம், 246 பயணிகளுடன் இன்று (11) காலை 7:07 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே இந்த விபத்துக்கு முகம் கொடுத்திருந்தது.
வான்வெளியில் எரிபொருளைக் குறைக்கும் நடவடிக்கை: பறவை மோதியதால் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, விமானத்தை உடனடியாகத் தரையிறக்க வேண்டிய அவசர நிலை ஏற்பட்டது. எனினும், விமானத்தில் அதிகளவு எரிபொருள் இருந்தமையால், அதன் எடையைக் குறைப்பதற்காக நீர்கொழும்பு களப்புப் பகுதிக்கு மேலாக மிகவும் தாழ்வான உயரத்தில் பறந்து, எரிபொருளை வான்வெளியில் வெளியேற்றும் (Fuel Dumping) பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
பாதுகாப்பாகத் தரையிறக்கம்: ஏ330 (A330) ரகத்தைச் சேர்ந்த இந்த பிரம்மாண்ட பயணிகள் விமானம், சுமார் 3 மணித்தியாலங்களுக்கும் மேலாக வான்வெளியில் வட்டமடித்ததை அடுத்து, இன்று காலை 10:24 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது.
இந்த அவசரத் தரையிறக்கல் நடவடிக்கையின் போது ஏற்படக்கூடிய ஆபத்துக்களை எதிர்கொள்வதற்காக, கட்டுநாயக்க விமான நிலைய நிர்வாகத்தினால் தீயணைப்புப் படையினர் மற்றும் மருத்துவக் குழுவினர் உள்ளிட்ட அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. விமானத்திலிருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்.




