கண்டி, தெல்தெனிய – ரங்கல காவல் எல்லைக்குட்பட்ட காட்டுப் பகுதியில், காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்த 22 வயதுடைய ஆடைத்தொழிற்சாலை பெண் ஊழியர் ஒருவர் கொலை செய்யப்பட்டு, புதைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உடிஸ்பத்துவ, ஹக்மன பகுதியைச் சேர்ந்த வீரசேகர முதியன்சேலாகே ஹீன்பிட்டகெதர வாசனா சந்தமாலி (22) என்ற யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.
கடந்த சில நாட்களாக குறித்த யுவதி வீட்டிற்கு வராததையடுத்து, பதற்றமடைந்த பெற்றோர்கள் ரங்கல காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். இம்முறைப்பாட்டின் அடிப்படையில் காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.
இதன்போது, சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட யுவதியின் காதலனிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணைகளில், அவரே யுவதியைக் கொலை செய்து காட்டுப் பகுதியில் ரகசியமாகப் புதைத்தமையை ஒப்புக்கொண்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவுக்கு அமைய தெல்தெனிய நீதவான் சம்பவ இடத்திற்கு நேரில் விஜயம் செய்து விசாரணைகளை மேற்கொண்டதுடன், அவரது முன்னிலையில் காட்டுப் பகுதியில் புதைக்கப்பட்டிருந்த யுவதியின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. சடலம் தோண்டி எடுக்கப்பட்ட போது அங்கு கூடியிருந்த பெற்றோர்களும் உறவினர்களும் கதறி அழுதமை அங்கிருந்தோரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
யுவதி எவ்வாறு கொலை செய்யப்பட்டார், மரணத்திற்கான காரணம் என்ன என்பது தொடர்பான உண்மைத் தன்மையைக் கண்டறிவதற்காக சடலம் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவ அறிக்கை கிடைத்தவுடன் சந்தேகநபருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த கொடூரச் சம்பவம் கண்டி மாவட்ட மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.




