• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • கட்டுநாயக்கவில் ரூ. 2.8 கோடி பெறுமதியான சிகரெட்டுகளுடன் 13 சீனப் பிரஜைகள் சுங்கப் பிரிவினரால் கைது!

கட்டுநாயக்கவில் ரூ. 2.8 கோடி பெறுமதியான சிகரெட்டுகளுடன் 13 சீனப் பிரஜைகள் சுங்கப் பிரிவினரால் கைது!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக சுமார் 2 கோடியே 84 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக கடத்தி வர முயன்ற 13 சீனப் பிரஜைகள் சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (02) செவ்வாய்க்கிழமை அதிகாலை தாய்லாந்தின் பாங்கொக் நகரிலிருந்து தாய் ஏயர் ஏசியா மற்றும் பாடிக் ஏயர் ஆகிய விமான சேவைகளுக்குச் சொந்தமான விமானங்கள் மூலம் இவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

விமான நிலையத்தின் சுங்கப் பிரகடனங்கள் ஏதுமற்ற பயணிகளுக்கான ‘கிரீன் சேனல்’ (Green Channel) வழியாக தங்களது 22 பயணப் பொதிகளுடன் வெளியேற முற்பட்ட போதே, சந்தேகத்தின் பேரில் சுங்க அதிகாரிகள் இவர்களை சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது, அவர்களது பயணப் பொதிகளுக்குள் இருந்து சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட, சீனாவில் தயாரிக்கப்பட்ட 948 சிகரெட் கார்டூன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றில் மொத்தம் ஒரு இலட்சத்து 89 ஆயிரத்து 600 சிகரெட்டுகள் காணப்பட்டதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள சீனப் பிரஜைகள் 28 முதல் 45 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், கைப்பற்றப்பட்ட சிகரெட் தொகையை அரசுடமையாக்கியுள்ள சுங்க அதிகாரிகள், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

Share the Post:

Related Posts