• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • கருமலையூற்று வரலாற்றுப் பள்ளிவாசல் பகுதிக்கு பிரதி பாதுகாப்பு அமைச்சர் விஜயம்: மீள நிர்மாணிக்க அனுமதிக்குமாறு மக்கள் உருக்கமான கோரிக்கை!

கருமலையூற்று வரலாற்றுப் பள்ளிவாசல் பகுதிக்கு பிரதி பாதுகாப்பு அமைச்சர் விஜயம்: மீள நிர்மாணிக்க அனுமதிக்குமாறு மக்கள் உருக்கமான கோரிக்கை!

திருகோணமலை மாவட்ட முஸ்லிம்களின் தொன்மையைப் பறைசாற்றும் வரலாற்றுச் சின்னமாக விளங்கிய கருமலையூற்றுப் பள்ளிவாசல் பகுதிக்கு, பிரதி பாதுகாப்பு அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண விஜயசேகர நேற்று (02) நேரில் விஜயம் செய்து பார்வையிட்டார்.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், கடந்த 1836 ஆம் ஆண்டு இந்திய சிற்பக்கலை நுட்பங்களுடன் நிர்மாணிக்கப்பட்ட இப்பள்ளிவாசல் பகுதி, 2008 இல் யுத்தம் முடிவடைந்த பின்னர் ‘உயர் பாதுகாப்பு வளையமாக’ மாற்றப்பட்டு, பொதுமக்கள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இவ்வாறான பின்னணியில், கடந்த 2014 ஆகஸ்ட் 16 அன்று இரவு, இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த இப்பள்ளிவாசல் அடையாளம் தெரியாத நபர்களினால் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது.

நீண்ட காலத்திற்குப் பிறகு தமது பூர்வீகக் காணிக்குள் செல்ல வாய்ப்புப் பெற்ற கருமலையூற்று மக்கள், இடித்து நொறுக்கப்பட்டுள்ள தங்களது வரலாற்றுப் பள்ளிவாசலை மீள நிர்மாணித்து, வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு அனுமதி அளிக்குமாறு பிரதி பாதுகாப்பு அமைச்சரிடம் நேரில் உருக்கமான வேண்டுகோள் விடுத்தனர்.

மக்களின் கோரிக்கைகளை செவிமடுத்த பிரதி பாதுகாப்பு அமைச்சர், “யுத்த காலத்தில் முப்படையினரால் பயன்படுத்தப்பட்ட மக்களின் தனியார் காணிகளை மிக விரைவில் மீள வழங்க நடவடிக்கை எடுப்போம். எனினும், தேசிய பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு பாதுகாப்புச் சபை மற்றும் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியே இறுதி முடிவு எடுக்கப்படும்” என உறுதியளித்தார்.

இவ்விஜயத்தின் போது, வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயேந்திரலால் ரத்னசேகர, திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் ஜி. எச். எம். ஹேமந்தகுமார மற்றும் முப்படை உயர் அதிகாரிகள் உள்ளிட்ட உயர்மட்டக் குழுவினர் உடனிருந்தனர்.

இதேவேளை, இந்த கள விஜயத்திற்கு முன்னதாக, திருகோணமலை மாவட்ட செயலகத்தில் மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் காணிப் பிரச்சினைகள் குறித்த விசேட மக்கள் சந்திப்பொன்றும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Share the Post:

Related Posts