• Home
  • ›
  • உலகச் செய்திகள்
  • ›
  • 15 ஆண்டுகளுக்குப் பின் சீனாவில் சாதனை: சர்வதேச சமையல் போட்டியில் இலங்கைக்கு வெள்ளிப் பதக்கம்; பால் சாதம், தேங்காய் ரொட்டிக்கு குவிந்த பாராட்டு!

15 ஆண்டுகளுக்குப் பின் சீனாவில் சாதனை: சர்வதேச சமையல் போட்டியில் இலங்கைக்கு வெள்ளிப் பதக்கம்; பால் சாதம், தேங்காய் ரொட்டிக்கு குவிந்த பாராட்டு!

பெய்ஜிங்: சீனாவில் நடைபெற்ற மதிப்புமிக்க 2026 கோடைக்கால சமையல் கலைஞர்கள் போட்டியில் (Summer Culinary Artists Competition 2026) இலங்கை சமையல் குழு வெள்ளிப் பதக்கத்தை வென்று, சர்வதேச சமையல் துறையில் தேசத்தின் பெயரைப் பொன்னெழுத்துக்களில் பொறித்துள்ளது. இதன் மூலம் 15 ஆண்டுகளுக்குப் பின்னர் சீன மண்ணில் சர்வதேச சமையல் சாதனை ஒன்றை இலங்கை பதிவு செய்துள்ளது.

சீனாவின் கிங்டாவோ (Qingdao) நகரில் கடந்த ஜூன் 26 மற்றும் 27 ஆகிய திகதிகளில் இப்போட்டி மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் சீனா, ரஷ்யா, கஸகஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் அஸர்பைஜான் உள்ளிட்ட உலகின் பல சக்திவாய்ந்த நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய திறமைவாய்ந்த சமையல் கலைஞர் அணிகள் பங்கேற்றிருந்தன.

சர்வதேச அரங்கில் கலக்கிய ‘பால் சாதமும் தேங்காய் ரொட்டியும்’

இப்போட்டியில் சீனாவின் பெய்ஜிங் நகரில் அமைந்துள்ள முன்னணி இலங்கை உணவகம் சார்பாக, தலைமை சமையல் கலைஞர் நிஷாத் சமரநாயக்க மற்றும் உதவி சமையல் கலைஞர் மனோஜ் லியனகே ஆகியோர் இலங்கை அணி சார்பாகக் களம் இறங்கினர்.

இலங்கையின் பாரம்பரிய உணவுகளான பால் சாதம், தேங்காய் ரொட்டி உள்ளிட்ட பல தூய இலங்கை சமையல் குறிப்புகளை (Recipes) இவர்கள் சர்வதேச நடுவர்கள் முன்னிலையில் தயாரித்து வழங்கினர். இலங்கைக்கே உரித்தான தனித்துவமான வாசனைத் திரவியங்கள் மற்றும் மசாலாப் பொருட்களால் சுவையூட்டப்பட்ட இந்த உணவுகள், உயர்மட்ட சீன சமையல் கலைஞர்கள் மற்றும் சர்வதேச உணவு நிபுணர்களிடமிருந்து பெரும் பாராட்டுகளையும் அதிஉயர் புள்ளிகளையும் பெற்றுத் தந்தன.

பலம் வாய்ந்த சர்வதேச அணிகளுக்கு கடுமையான சவாலை அளித்து, 15 வருடங்களுக்குப் பிறகு சீனாவில் இலங்கை அணி பெற்றுள்ள இந்த வெள்ளிப் பதக்க வெற்றியானது, உலக அரங்கில் இலங்கை உணவுப் பாரம்பரியத்திற்கு கிடைத்துள்ள பெருங்கௌரவமாகப் பார்க்கப்படுகிறது.

Share the Post: