பெருந்தோட்டப் பகுதியில் 11 வயது சிறுமி ஒருவரிடம் தவறான முறையில் நடந்துகொண்ட குற்றச்சாட்டின் கீழ் 45 வயதுடைய நபர் ஒருவர் ஹங்குராங்கெத்த காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் ஹங்குராங்கெத்த காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட ஹேவாஹெட்ட பகுதியில் அமைந்துள்ள பெருந்தோட்டம் ஒன்றில் அரங்கேறியுள்ளது.
கடந்த 28ஆம் திகதி இடம்பெற்ற இக்கொடூர சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த சந்தேகநபர் சிறுமியிடம் தவறாக நடந்துகொள்வதை அந்தத் தோட்டப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் அவதானித்துள்ளனர். உடனடியாகச் செயற்பட்ட அவர்கள், சந்தேகநபரை மடக்கிப் பிடித்து ஹங்குராங்கெத்த காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். இளைஞர்களின் இந்த விரைவான மற்றும் பொறுப்பான நடவடிக்கை அப்பகுதியில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி உடனடியாக கண்டி போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தகுந்த மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் தற்போது வீடு திரும்பியுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவம் குறித்து ஹங்குராங்கெத்த காவல்துறைப் பொறுப்பதிகாரி சூரியன் செய்தி சேவைக்கு உறுதிப்படுத்துகையில், கைது செய்யப்பட்ட 45 வயதுடைய சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




