• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • இந்தியாவில் இலங்கை நீர்வள வளர்ப்புத் துறை அதிகாரிகளுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி நிறைவு

இந்தியாவில் இலங்கை நீர்வள வளர்ப்புத் துறை அதிகாரிகளுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி நிறைவு

ஹஸ்பர் ஏ.எச்_

இலங்கையின் தேசிய நீர்வள வளர்ச்சி அதிகார சபை (NAQDA)யைச் சேர்ந்த 10 நீர்வள வளர்ப்பாளர்கள் மற்றும் உதவி நீர்வள வளர்ப்பாளர்கள் இந்தியாவில் நடைபெற்ற விரிவான திறன் மேம்பாட்டு பயிற்சித் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர். இந்த நிகழ்வு, நிலையான மீன்வள மேம்பாடு மற்றும் பிராந்திய அபிவிருத்தி முகாமைத்துவம் திறந்தான்  இரு நாடுகளின் உறுதியை வெளிப்படுத்துகிறது. NAQDA, இலங்கை அரசின் மீன்வளம், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் கீழ் இயங்குகிறது.

இந்த இரண்டு வாரப் பயிற்சித் திட்டம், இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் அமைந்துள்ள ICAR – மத்திய நன்னீர் நீர்வள வளர்ப்பு நிறுவனம் (Central Institute of Freshwater Aquaculture) இல், 2026 ஜூலை 06 முதல் 19 வரை நடைபெற்றது. 

2026 பெப்ரவரி மாதத்தில் நடைபெற்ற முதல் பயிற்சியைத் தொடர்ந்து, NAQDA அதிகாரிகளுக்காக நடத்தப்பட்ட இரண்டாவது பயிற்சித் திட்டமாக இது அமைந்தது.

இப்பயிற்சித் திட்டத்தின் மூலம், பங்கேற்பாளர்கள் நவீன நன்னீர் நீர்வள வளர்ப்பு நடைமுறைகள் குறித்து கல்வி விரிவுரைகள், ஆய்வக விளக்கங்கள் மற்றும் பண்ணை வளாகங்களுக்கு மேற்கொள்ளப்பட்ட களப்பயணங்கள் மூலம் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளை அறிந்துகொள்ளும் வாய்ப்பைப் பெற்றனர்.

இப்பயிற்சி, மீன்பண்ணைத் திட்டமிடல் மற்றும் குளங்கள் அமைத்தல், கார்ப் இன மீன்களின் இனப்பெருக்க மேலாண்மை, செயற்கை இனப்பெருக்கம், குஞ்சு வளர்ப்புக் குள மேலாண்மை, மீன் ஊட்டச்சத்து மற்றும் சுகாதார மேலாண்மை, நுண்ணுயிர் எதிர்ப்பு திறன் (Antimicrobial Resistance), பயோஃப்ளாக் (Biofloc) மற்றும் மறுசுழற்சி நீர்வள வளர்ப்பு அமைப்புகள் (Recirculatory Aquaculture Systems), திலாபியா மீன் குஞ்சு உற்பத்தி, நன்னீர் இறால் மற்றும் முத்து வளர்ப்பு, மேலும் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் (ICT) மற்றும் புவியியல் தகவல் அமைப்பு (GIS) ஆகியவற்றின் பயன்பாடு உள்ளிட்ட தொழில்நுட்பத் திறன்களில் கவனம் செலுத்தியது.

இந்தப் பயிற்சித் திட்டம், இந்தியப் பிரதமர்  நரேந்திர மோடி அவர்கள் 2025 ஏப்ரல் மாதம் இலங்கைக்கு மேற்கொண்ட அரச உத்தியோகபூர்வ பயணத்தின் போது அறிவித்த மேம்படுத்தப்பட்ட திறன் மேம்பாட்டு கட்டமைப்பின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் மூலம், இலங்கைத் தொழில்முறை நிபுணர்களுக்காக ஆண்டுதோறும் கூடுதலாக 700 சிறப்புப் பயிற்சி இடங்கள் வழங்கப்படுகின்றன. மேலும், இந்தியாவின் தேசிய நல்லாட்சிக்கான மையம் (NCGG) மற்றும் இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனம் (SLIDA) இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் ஆண்டுதோறும் 300 இலங்கை சிவில் சேவை அதிகாரிகள் பயிற்சி பெறுகின்றனர். இதன் மூலம், இந்தியாவின் மேம்படுத்தப்பட்ட திறன் மேம்பாட்டு முயற்சிகள் ஆண்டுதோறும் மொத்தம் 1000 இலங்கையர்களுக்கு பயனளிக்கின்றன.

Share the Post: