• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • மட்டக்களப்பு பொது நூலகத்திற்கு தமிழ்நாடு ரோட்டரி கிளப் மூலம் புத்தகங்கள் வழங்‌க நடவடிக்கை: எம்.பி சிறிநாத்தின் முயற்சியில் சாதகமான முடிவு!

மட்டக்களப்பு பொது நூலகத்திற்கு தமிழ்நாடு ரோட்டரி கிளப் மூலம் புத்தகங்கள் வழங்‌க நடவடிக்கை: எம்.பி சிறிநாத்தின் முயற்சியில் சாதகமான முடிவு!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, இந்திய தமிழ்நாடு ரோட்டரி கிளப் (Rotary Club) பிரதானிகள் நேற்றைய தினம் 18.07.2026 மட்டக்களப்பு மாநகர சபை மற்றும் பொது நூலகத்திற்கு நேரடி விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.

​மாநகர சபை முதல்வர் மற்றும் பொதுநூலக நிர்வாகிகளை நேரில் சந்தித்த இக்குழுவினர், அங்குள்ள தேவைகள் மற்றும் குறைபாடுகள் குறித்து விரிவாகக் கேட்டறிந்தனர்.

​இதன்போது கருத்துத் தெரிவித்த தமிழ்நாடு ரோட்டரி கிளப் (Rotary Club) பிரதானிகள், மட்டக்களப்பு பொது நூலகத்திற்குத் தேவையான விஞ்ஞான, தொழில்நுட்பம் சார்ந்த புத்தகங்களையும், தமிழ்நாடு தமிழ் அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக தமிழ் வரலாற்றுப் புத்தகங்களையும் பெற்றுத் தருவதாக உறுதியளித்தனர்.

அத்துடன், இந்திய அரசின் பங்களிப்புடன் வடகிழக்கு மாகாணங்களில் உள்ள பாடசாலைகளுக்கு விஞ்ஞானத் தொழில்நுட்ப ஆய்வுகூடங்களை (Science & Tech Labs) அமைத்துக் கொடுப்பதுடன், அவற்றுக்குத் தேவையான பயிற்சி நெறிகளையும் வழங்க நடவடிக்கை எடுப்பதாகக் குறிப்பிட்டனர்.

​மேலும், பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சிறிநாத் விடுத்த கோரிக்கைக்கு அமைய, மட்டக்களப்பு மாவட்டத்தின் பின்தங்கிய கிராமங்களின் கல்வி அபிவிருத்தி மற்றும் மட்டக்களப்பு வாவியை மையப்படுத்திய சுற்றுலாத்துறை மேம்பாடு உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

​இவ் விஜயத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத், மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன், பிரதி முதல்வர் திரு.தினேஷ், இந்திய தமிழ்நாடு ரோட்டரி கிளப் (Rotary Club) பிரதானிகள், ஏறாவூர்பற்று பிரதேச சபை உறுப்பினர் த.பிரபாகரன், மட்டக்களப்பு சிட்டி லயன்ஸ் கழகத்தின் (Rotary Club of Batticaloa City) பிரதிநிதி திரு.ஜெகவண்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Share the Post: