கிழக்கிலங்கையின் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற ஆன்மீகத் தலங்களில் ஒன்றான களுவாஞ்சிகுடி அருள்மிகு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தின் வருடாந்த வைகாசிப் பெருவிழா இன்று அதிகாலை திருக்கதவு திறத்தலுடன் பக்திப்பூர்வமாக ஆரம்பமாகியுள்ளது.
இன்று அதிகாலை மங்கள வாத்தியங்கள் முழங்க, “அரோகரா… அரோகரா…” என்ற பக்தர்களின் பக்தி முழக்கங்களுக்கு மத்தியில் அம்மனின் திருக்கதவு திறக்கப்பட்டது. தமிழர்களின் பண்பாட்டு அடையாளமாகவும் ஆன்மீக மரபாகவும் விளங்கும் இவ்வாலயத்தின் இந்த புனித தருணம், கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.
பெருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு முறைப்படி காப்புக்கட்டப்பட்டு, விசேட பூஜைகளும் பாரம்பரிய சடங்குகளும் ஆரம்பமாகியுள்ளன. இன்று முதல் தொடர்ந்து 9 நாட்கள் ஆலயத்தில் விசேட வழிபாடுகள், பக்தி நிகழ்வுகள் மற்றும் சமய மரபுச் சடங்குகள் வெகுவிமர்சையாக இடம்பெறவுள்ளன.
இவ்விழாவின் உச்ச நிகழ்வான வரலாற்றுப் புகழ்பெற்ற “திருக்குளிர்த்தி” சடங்கு எதிர்வரும் 31.05.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்று, விழா மங்களகரமாக நிறைவடையவுள்ளது.
நீதியின் தெய்வமாம் கண்ணகை அம்மனின் பேரருளைப் பெற்று, குடும்ப நிம்மதி, உடல் ஆரோக்கியம் மற்றும் வாழ்வில் வளம் பெற வேண்டி நாடெங்கிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் களுவாஞ்சிகுடியை நோக்கி வருகை தரத் தொடங்கியுள்ளனர். அம்மனின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்!









