• Home
  • உள்ளூர் செய்திகள்
  • யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார நிலையத்தை செயற்படுத்துவதற்கான தீர்க்கமான நடவடிக்கை

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார நிலையத்தை செயற்படுத்துவதற்கான தீர்க்கமான நடவடிக்கை

ஹஸ்பர் ஏ எச்-

2026 செப்டெம்பர் 18ஆம் திகதி, யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார நிலையத்தை நிர்வகிப்பதற்கும் முகாமைத்துவம் செய்வதற்குமான அறக்கட்டளை (Trust) உத்தியோகபூர்வமாக நிறுவப்பட்டது. இந்த அறக்கட்டளை இடைக்கால நிர்வாக அமைப்பாக செயற்பட்டு, கலாசார நிலையத்தின் தொடர்ச்சியான செயற்பாடுகளுக்கு தேவையான நிர்வாக மற்றும் நிதி சுயாதீனத்தை வழங்கும்.

அறக்கட்டளையின் நிர்வாக சபையில் பதவிவழி உறுப்பினர்களாக யாழ்ப்பாண மாநகர ஆணையாளர், யாழ்ப்பாண மாநகர சபை மேயர், வடக்கு மாகாண நிர்வாகத்திற்குப் பொறுப்பான அமைச்சர் அல்லது அவரது பிரதிநிதி, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் ஆகிய நான்கு பேர் இடம்பெறுகின்றனர். மேலும், கலை மற்றும் கலாசாரம், வர்த்தகம், கல்வி, சட்டம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஐந்து முக்கிய நிபுணர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய அரசாங்கத்தின் 1.2 கோடி அமெரிக்க டொலர் (USD 12 மில்லியன்) நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த நவீன வசதிகளைக் கொண்ட கலாசார நிலையத்தில் இரண்டு மாடிகளைக் கொண்ட அருங்காட்சியகம், 600-க்கும் மேற்பட்டோர் அமரக்கூடிய திரையரங்கு வடிவிலான கேட்போர் கூடம், 11 மாடிகளைக் கொண்ட கற்றல் கோபுரம் மற்றும் பொது அரங்கம் ஆகியவை அமைந்துள்ளன. இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, 2015 மார்ச் மாதம் இந்தியப் பிரதமர் மாண்புமிகு ஸ்ரீ நரேந்திர மோடி அவர்கள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தபோது இடம்பெற்றது.

இக்கலாசார நிலையம் 2022 மார்ச் மாதம் திறந்து வைக்கப்பட்டதுடன், 2023 பெப்ரவரி மாதம் இலங்கை மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. 2026 செப்டெம்பர் 18ஆம் திகதி நிறுவப்பட்டுள்ள இந்த அறக்கட்டளை, யாழ்ப்பாண மாநகர சபையிடம் கலாசார நிலையம் கையளிக்கப்படும் வரையிலான இடைக்கால பயனுள்ள நிர்வாக பொறிமுறையாக செயற்படும். இதன் மூலம் நிறுவன ரீதியான திறன்கள் மேம்படுத்தப்பட்டு, கலாசார நிலையம் நிதி ரீதியாக சுயாதீனமாகவும் நிலையான முறையிலும் செயற்படுவதற்கான அடித்தளம் உருவாக்கப்படும்.

இதன் மூலம், யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார நிலையம் யாழ்ப்பாணம் மற்றும் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்களின் கலை, கலாசாரம் மற்றும் கல்வி சார்ந்த வளர்ச்சிக்கான துடிப்பான மையமாக விரைவில் உருவாக வேண்டும் என்ற நோக்கத்தை நனவாக்குவதில் இந்த அறக்கட்டளை முக்கிய பங்களிப்பை வழங்கும்.

Share the Post: