• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • யாழ்ப்பாணத்தில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற “நீதிக்கான நீள் பயணம்” மாநாடு மற்றும் கவனயீர்ப்பு பேரணி!

யாழ்ப்பாணத்தில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற “நீதிக்கான நீள் பயணம்” மாநாடு மற்றும் கவனயீர்ப்பு பேரணி!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, “தமிழ் மக்களின் நீதிக்கான நீள் பயணம்” எனும் தொனிப்பொருளில் மாபெரும் சர்வதேச மாநாடும் கவனயீர்ப்பு பேரணியும் இன்று (30.08.2026) யாழ்ப்பாணத்தில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றன.

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வுகள், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை சர்வதேச சமூகத்திடம் வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டன.

நிகழ்வின் ஆரம்பமாக இன்று காலை, யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு நினைவுத் தூபியில் பொதுச் சுடரேற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அத்தூபியிலிருந்து தந்தை செல்வா கலையரங்கு வரை பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற மாபெரும் கவனயீர்ப்பு பேரணி இடம்பெற்றது.

பேரணியின் நிறைவில் தந்தை செல்வா கலையரங்கத்தில் “நீதிக்கான நீள் பயணம்” சர்வதேச மாநாடு உத்தியோகபூர்வமாக ஆரம்பமானது. இதன்போது உயிரிழந்தவர்களின் நினைவாகச் சுடரேற்றி அகவணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து நினைவுரைகளும் நிகழ்த்தப்பட்டன.

இம்மாநாட்டில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி சிறிநாத் நேரில் கலந்துகொண்டு தனது முழுமையான ஆதரவை வழங்கியிருந்தார்.

மேலும், பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், ஞா.சிறிநேசன், து.ரவிகரன், ஐ.நா பணிக்குழு உறுப்பினர், சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசியப் பிராந்தியப் பணிப்பாளர், சர்வதேச ராஜதந்திரிகள், மன்னார் மறை மாவட்ட ஆயர், வேலன் சுவாமிகள், மதத் தலைவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.

Share the Post: