மொனராகலை (21 ஆகஸ்ட் 2026) — இன்று அதிகாலை மொனராகலை மாவட்டத்தின் கும்புக்கன பகுதியில் இடம்பெற்ற கோரமான வீதி விபத்தொன்றில் ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
வெல்லவாய – மொனராகலை பிரதான வீதியின் கும்புக்கன கல்கம பாலத்திற்கு அருகில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. வெல்லவாயை நோக்கிச் சென்று கொண்டிருந்த டிப்பர் லொறியொன்று, அதற்கு எதிர்த்திசையில் வந்த உழவு இயந்திரத்துடன் நேருக்கு நேர் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் உழவு இயந்திரத்தின் பெட்டியில் பத்து பேர் பயணித்துள்ளனர். மோதிய வேகத்தில் உழவு இயந்திரம் கடுமையாகச் சேதமடைந்ததோடு, அதில் பயணித்தவர்கள் வீதியில் தூக்கி வீசப்பட்டுள்ளனர்.
படுகாயமடைந்தவர்களில் எட்டுப் பேர் உடனடியாக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர்களில் ஐந்து பேர் உயிரிழந்தனர். மேலும் மூவர் தொடர்ந்தும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பலியானவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் அதே பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பது ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. டிப்பர் லொறிச் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மொனராகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





